அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 19ஆம் தேதியன்று மலைமீது பிரம்மாண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். தீபத்திருவிழாவிற்காக 60 நாட்களுக்கு முன்பு இருந்தே ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி தொடங்கி வரும் 23-ம் தேதி வரை என 17 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மற்றும் மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக, மகாதீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, ஆண் – பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சிக் கொடுக்க உள்ளார்.
இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையாரே காட்சி கொடுப்பதால் மூலவர் சன்னதி அடைக்கப்படும். பின்னர் மறுநாள், மூலவர் சன்னதி திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை வழக்கம்போல் நடைபெறும்.
இதையடுத்து, கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவமானது இந்தாண்டும் அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தெப்பல் உற்சவத்தை தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவம் வரும் 23-ம் தேதி நடந்ததும் விழா நிறைவடையும்.
ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் ஒன்று திரள்வார்கள். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பரணி தீபம் மற்றும் மகாதீப விழாவில் பக்தர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: குரு பகவான் கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் யார் தெரியுமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.