• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்...

திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்...

கார்த்திகை தீபத் திருநாள் அன்று, 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், தீபம் ஏற்றப்படுகிறது. 7½ அடி உயரம் கொண்ட கொப்பரையில், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 3 ஆயிரம் கிலோ பசுநெய், 2 கிலோ கற்பூரம் சேர்த்து இந்த தீபம் ஏற்றப்படும். தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.

  • Share this:
    பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாக விளங்குகிறது. அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை, அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அண்ணுதல் என்பதற்கு ‘நெருங்குதல்’ என்று பொருள். ‘அண்ணா’ என்பது, ‘நெருங்க முடியாத’ என்ற பொருளைத் தரும். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலையாக நின்றதால், இத்தலம் ‘அண்ணாமலை’ என்று பெயர் பெற்றது.

    இத்தல கிளி கோபுரத்தின் கீழ் இட பக்கம் ஒரு விநாயகர் சன்னிதி உள்ளது. இவருக்கு ‘அல்லல் தீர்க்கும் விநாயகர்’ என்று பெயர். முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் உள்ள ஆறு படைவீடுகளில், இது முதல் படைவீடாகும்.

    கிரிவலப்பாதையின் எட்டு திசைகளுக்கும் எட்டு லிங்கங்கள் இருக்கின்றன. இதனை அஷ்டலிங்கங்கள் என்கிறோம். அவை, இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம் ஆகியவை ஆகும். இங்குள்ள இறைவன், ‘அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘உண்ணாமுலையம்மன், அபிதகுஜாம்பாள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ‘அருணை சக்தி பீட’மாக விளங்குகிறது.

    25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரமாண்ட ஆலயம் இது. இதில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னிதிகள், 306 மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை அடங்கியிருக்கின்றன.

    அண்ணாமலையார் ஆலயத்தின் தற்போதைய முழுமையான கட்டிட அமைப்புகள் அனைத்தும் கட்டி முடிக்க, சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பதாக கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. கயிலாய மலையில் சிவபெருமான் வீற்றிருப்பதால் அது புனிதமானது. அதே போல் சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் திருவண்ணாமலையும் புனிதமானதாக கருதப்படுகிறது.

    இந்த மலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளதாக புராணம் சொல்கிறது. இங்கு பெளர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்புக்குரியது. கிரிவலம் வரும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பலன் கிடைப்பதாக ஐதீகம். சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்வதாக கருதப்படும் இங்கு, கிரிவலப் பாதையை சித்தர்களும் வலம் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

    கார்த்திகை தீபத் திருநாள் அன்று, 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், தீபம் ஏற்றப்படுகிறது. 7½ அடி உயரம் கொண்ட கொப்பரையில், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 3 ஆயிரம் கிலோ பசுநெய், 2 கிலோ கற்பூரம் சேர்த்து இந்த தீபம் ஏற்றப்படும். தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.

    மேலும் திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும். இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும்.

    மேலும் படிக்க...  திருவண்ணாமலை தீப திருவிழா... 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை

    9 கோபுரங்களின் விபரம் 

    1. ராஜகோபுரம் (கிழக்கு),

    2. பேய்க் கோபுரம் (மேற்கு),

    3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு),

    4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு)

    .5. வல்லாள மகாராஜா கோபுரம்

    6. கிளி கோபுரம்

    7. வடக்கு கட்டை கோபுரம்,

    8. தெற்கு கட்டை கோபுரம்,

    9. மேற்கு கட்டை கோபுரம்.

    மேலும் படிக்க.... திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்களும்

    1. ராஜகோபுரம்

    திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

    தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார். அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.



    1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால் அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

    கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பெளர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

    2. பேய்க்கோபுரம்

    ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார்.

    இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர். மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

    3. திருமஞ்சன கோபுரம்

    திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

    மேலும் படிக்க... கார்த்திகை தீப திருநாள்: வழிபடும் முறைகளும் அதன் பலன்களும்  

    ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள். அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது.

    4. வல்லாள மகாராஜா கோபுரம்

    இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு. ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

    இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன.

    5. கிளி கோபுரம்

    திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும். 1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று. அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார். கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

    மேலும் படிக்க... கார்த்திகை தீப திருநாள்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?

    6. தெற்கு கட்டை கோபுரம்

    திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

    7. மேற்கு கட்டை கோபுரம்

    பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

    8. வடக்கு கட்டை கோபுரம்

    அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

    9. அம்மணியம்மாள் கோபுரம்

    திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது.

    மேலும் படிக்க... கார்த்திகை தீபத்தன்று பழைய விளக்குகளை ஏற்றலாமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: