Home /News /spiritual /

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலைமோதிய கூட்டம்: அக்டோபர் வரை தரிசன டோக்கன் இல்லை

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலைமோதிய கூட்டம்: அக்டோபர் வரை தரிசன டோக்கன் இல்லை

Youtube Video

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக, இணைய மையங்கள் முன்பு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    பிற மாநில பக்தர்களும் திருப்பதிக்கு சென்று வழிபட, தேவஸ்தானம் அண்மையில் அனுமதி அளித்திருந்தது. இதன்படி நாள்தோறும் இலவச தரசனத்துக்கு 8 ஆயிரம் பேருக்கும், 300 ரூபாய் தரிசனத்துக்கு 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக திருமலையில் உள்ள முன்பதிவு மையங்களில் கூட்டம் அலைமோதியது. அக்டோபர் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத்தீர்ந்துவிட்டன.

    இலவச தரிசன டோக்கன் கவுண்டர் திறந்திருக்கும் என்னும் நம்பிக்கையில் இன்றும் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்திருந்தனர். ஆனால் கவுண்டர் நேற்று முன்தினமே மூடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இலவச தரிசனங்களுக்காக வந்திருந்த பக்தர்களுக்கு காலை 9 மணி முதல் ஆன்லைனில் டோக்கன்களை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று சீனிவாசம் கட்டிட வளாகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இலவச தரிசனத்துக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கப்பட்டது. எனவே அவர்கள் திருப்பதி பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின் அருகில் இருக்கும் இன்டர்நெட் சென்டர்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன்களை முன்பதிவு செய்தனர்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய முன்பதிவு, 10.47க்கு நிறைவடைந்தது. எப்படியாவது இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டை பெற பக்தர்கள், திருப்பதியில் உள்ள இணைய மையங்கள் முன்பு நீண்டதூரம் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு குறுகிய நேரத்தில் முடிந்தது. அவை கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

    300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் உட்பட சாமி தரிசனத்திற்காக எந்தவித ஆவணமும் இல்லாதவர்கள் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே டோக்கன் கிடைக்காத பக்தர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டது.

    இதனிடையே, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அக்டோபர் மாதம் வரை இலவச மற்றும் கட்டண முன்பதிவு டோக்கன் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Thirumala

    அடுத்த செய்தி