• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • கந்த சஷ்டி விரதம் 2021: நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்யும் முருகன்

கந்த சஷ்டி விரதம் 2021: நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்யும் முருகன்

சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி கிடையாது.

  • Share this:
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர்   2-ம் நாள் திருவிழா முதல் 5-ம் நாள் திருவிழா வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. 6-ம் நாள் திருவிழாவான வரும் 9-ம் தேதி நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர், கோயில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒன்றாம் நாள் திருவிழா முதல் 5-ம் நாள் திருவிழா வரை, அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இதில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களும், 5 ஆயிரம் பேர் நேரடியாக வரும் பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். முக்கிய விழாக்களான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது என்று அரிவிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நாளை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    7-ம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் படிக்க... கந்தசஷ்டி விரதம் இருப்பதினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

    சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் படிக்க... சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு அறிவிப்பு...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: