அத்தி வரதர் வைபவம் நிறைவு: 2059-ல் மீண்டும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்

Athi varadar: அத்தி வரதர் தரிசனம் நிறைவுற்றதும் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு அத்தி வரதர் சிலையை வசந்த மண்டபத்தில் இருந்து 100 அடி தொலைவில் உள்ள அனந்தசரஸ் குளத்திற்குள் எழுந்தருளச் செய்யும் பணிகள் தொடங்கும். இந்த பணிகள் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும்.

Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 7:49 AM IST
அத்தி வரதர் வைபவம் நிறைவு: 2059-ல் மீண்டும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்
அத்திவரதர்
Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 7:49 AM IST
காஞ்சிபுரத்தில் 31 நாட்கள் சயன கோலத்திலும், 16 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளித்து வந்த அத்தி வரதர் தரிசனம் அதிகாலையுடன் நிறைவடைந்தது. கடந்த 47 நாட்களில் நாட்டின் முதல் குடிமகன் முதல் கடைக்கோடி பக்தர்கள் வரை ஒரு கோடியே 4 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் பெருவிழா கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. இதற்காக ஜூன் 28-ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணியில் இருந்து அத்தி வரதர், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். தைலக்காப்புகள் பூசப்பட்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அத்தி வரதர் சயன கோலத்தில் நாள்தோறும் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.

சிறப்பு ஏற்பாடுகள்


ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர், கழிவறை, தற்காலிக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. குற்ற சம்பவங்களை தடுக்க கோவில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பொது தரிசன பாதை, 300 ரூபாய் கட்டண பாதை மற்றும் விஐபி தரிசனம் என மூன்று பாதைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தினந்தோறும் வண்ண பட்டாடை உடுத்தி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் அளித்து வந்த நிலையில், நாளுக்கு நாள் பக்தர்கள் அதிகரித்ததால் தரிசன நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.

பக்தர்கள் வருகை அதிகரிப்பு:

Loading...

ஜூலை 31-ம் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்தி வரதர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் இருந்து நின்ற கோலத்தில் அருள் பாலித்தார். சயன கோலத்தில் அத்தி வரதரை தரிசித்த பக்தர்கள் மீண்டும் நின்ற கோலத்தில் அத்தி வரதரை தரிசிக்க வந்ததால் நாளொன்றுக்கு பக்தர்கள் வருகை 3 லட்சத்தையும் தாண்டியது. அதற்கேற்ப போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் விரிவுபடுத்தப்பட்டன. பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அத்தி வரதர் தரிசன நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

விழாவின் 47-ம் நாளான நேற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருந்ததால் நள்ளிரவு ஒரு மணியளவில் கிழக்கு கோபுர வாசல் நடை திறக்கப்பட்டிருந்தது. அதற்கு பின் நடை அடைக்கப்பட்டு கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

விவிஐபி தரிசனம்:

கடந்த 47 நாட்களில் ஒரு கோடியே 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அத்தி வரதரை தரிசித்தனர். இதேபோன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தியம்மாள், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி உள்ளிட்டோரும் அத்தி வரதரை தரிசித்து சென்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், லாரன்ஸ், நயன்தாரா உள்ளிட்ட திரை பிரபலங்களும் வருகை தந்தனர்.

இனி 2059-ல் தான்...

அத்தி வரதர் தரிசனம் நிறைவுற்றதும் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு அத்தி வரதர் சிலையை வசந்த மண்டபத்தில் இருந்து 100 அடி தொலைவில் உள்ள அனந்தசரஸ் குளத்திற்குள் எழுந்தருளச் செய்யும் பணிகள் தொடங்கும். இந்த பணிகள் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். அதற்கு பின் 40 ஆண்டுகள் கழித்து 2059 ஆம் ஆண்டு அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...