தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேச தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், மொட்டை அடித்தல், எழுத தொடக்குதல் போன்றவற்றை ஆரம்பிப்பார்கள்.
புராணக்கதை
ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட்டது. அதில் தேவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் அசுரர்கள் பல்வேறு தொல்லைகளும், கஷ்டங்களையும் கொடுத்து வந்தனர்.
அசுரர்களை எப்படி வெல்வது என்று தெரியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
அசுரர்களை வெற்றி பெற அவர்களுடன் போரிட தலைமை தாங்கி செல்லக்கூடிய சக்தி வாய்ந்த தலைமைத் தேவை என வேண்டினர். கருணைக்கடலான ஈசன், தன் நெற்றிக்கண்ணிலிருந்து கந்தனை உருவாக்கினார்.நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள் ஆறு அழகிய குழந்தைகள் ஆகின. அந்த குழந்தைகளை கார்த்திகை பெண்கள் வளர்த்த பின்னர் ஆறுமுகமாக உருவெடுத்தார். இந்த தைப் பூச திருநாளில் தான் முருகனுக்கு பார்வதி தேவி ஞான வேல் வழங்கினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
தைப்பூச சிறப்புகள்
முருகனுக்கு நான்கு நட்சத்திரங்கள் உகந்தது. அவை வைகாசி விசாகம், கார்த்திகை, பங்கினி உத்திரம், தைப்பூசம் ஆகும். முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் திருநாள். ஆறுவராக உதித்த முருகன் சக்தியின் துணையால் ஒருவனான நாள் கார்த்திகை திருநாள். அசுரர்களை அழித்து, அவர்களை ஆட்கொண்ட நாள் ஐப்பசியில் வரும் சஷ்டி. வள்ளியை திருமணம் புரிந்த நாள் பங்குனி உத்திரம் திருநாள். அன்னையிடம் வேல் வாங்கி, திருக்கையில் வேல் ஏந்திய நாள் தான் தை பூசம் திருநாளாகும்.
எந்த காரியத்தையும் பூசத்தில் தொடங்கினால் பூர்த்தி ஆகும் என்பார்கள். அதனால் திருமணத் தடை உள்ளவர்கள், பூச நட்சத்திரத்தில் திருமண பேச்சை தொடங்கினால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். பள்ளியில் சேர்க்காத சிறு குழந்தைகளுக்கு, இந்த நாளில் வீட்டிலேயே கல்வியை தொடங்க அந்த குழந்தை முருகனைப் போல அறிவார்ந்த குழந்தையாக இருக்கும்.
மேலும் படிக்க... வைகாசி விசாகம் 2021 : இந்த நாளின் சிறப்புகள் என்ன? முருகன் கடவுளை எப்படி வழிப்பட வேண்டும்?
உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் பார்க்கப்படுகிறது. அதாவது தேவர்களின் பகல் பொழுது தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மகரம் எனும் புண்ணிய ராசியில் சூரியனும், தன் சொந்த வீட்டில் சந்திரனும் நிற்க தை பூச திருநாள் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனின் அருளைப் பெறுவர்.
தைப்பூச திருநாள் 2022 எப்போது?
தை மாதம் 5ம் தேதி ஜனவரி 18ஆம் தேதி அதிகாலை 5.58 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அன்று முழுவதும் பூச நட்சத்திரம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க... கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.