Home /News /spiritual /

பாவத்தை போக்கும் தை மாத ஏகாதசி விரதம் இன்று...

பாவத்தை போக்கும் தை மாத ஏகாதசி விரதம் இன்று...

பெருமாள்

பெருமாள்

Ekadasi : எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும் மேற்கொள்வதில்லை. ஏகாதசி விரதத்தின் மகிமையை தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஏகாதசி நாளில் விரதம் இருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம். அதிலும் தை மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு வாய்ந்தது. இன்று 28.1.22 வெள்ளிக் கிழமை சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை வழிபடுவது நல்லது.  விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம்.

    ஏகாதசி வழிபடும் முறை

    ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தேவைப்படும்போது மட்டும் தண்ணீர் குடிக்கலாம்.

    உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை கடைபிடிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது. ஏகாதசி நாள் முழுவதும் ராம நாமத்தையோ கிருஷ்ண நாமத்தையோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தையோ உச்சரித்து பெருமாளை வழிபடலாம்.

    மேலும் நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்தால் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை. முடிந்தால், இன்று புளியோதரை நைவேத்தியம் செய்து, பசித்திருப்போருக்கு வழங்குங்கள். உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் உங்களுக்குப் பிடித்தமான உறவுக்காரர்கள் நண்பர்கள் என யார் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் உணவுப் பொட்டலம் வழங்குதல் பாவங்களை போக்கும்.

    புராணக்கதை

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.

    பெருமாள்


    பலன்கள்

    விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வாழ்வில் ஏற்றம் பெற்று, சங்கடங்கள் தீர்ந்து இன்புற்று வாழலாம். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு.

    மேலும் படிக்க... செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்ய சரியான காலம், நேரம் எது?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Vaikunda ekadasi

    அடுத்த செய்தி