Home /News /spiritual /

ரகசியமாக பெண்கள் மட்டுமே வணங்கும் அம்மன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ரகசியமாக பெண்கள் மட்டுமே வணங்கும் அம்மன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பூஜை செய்யும் பெண்கள்

பூஜை செய்யும் பெண்கள்

இந்த விரதம் அனுஷ்டிப்பதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளையும், திருமணமாகி குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தை வரமும் கிடைப்பதுடன், குடும்ப நலமும் மேம்படும் என்பது ஐதீகம்...

    தை மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தை செவ்வாயில் அம்மாயி கொழுக்கட்டை செய்து வணங்குதல் நல்லது. அம்மாயி என்பது அவ்வை பாட்டியை குறிக்கும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில்  தை செவ்வாய் அன்று அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

     அவ்வையார் பாட்டிக்கு நோன்பு இருத்தல்

    தை மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அவ்வையார் பாட்டிக்கு கொழுக்கட்டை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. தென் மாவட்டங்களில் இன்றைக்கும் அவ்வையார் வழிபாடு நடைபெறுகிறது. இந்த வழிபாட்டை அம்மாயி சாமி கும்பிடுதல் என்று கிராமங்களில் கூறுவது வழக்கம். இன்றும் பெண்கள் அம்மாயி சாமி என்றுதான் கூறி வருகிறார்கள். இந்த வழிபாட்டை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் ஐதீகம். ஆண்கள் இதில் கலந்துக்கொள்ளுதல் கூடாது. அத்துடன் அதன் பிரசாதமான அம்மாயின் கொழுக்கட்டையையும் ஆண்களுக்கு கொடுக்க க்கூடாது.

     பூஜை செய்யும் முறை

    தை மாத செவ்வாயில் விரதம் இருக்கும் பெண்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு ஒரு வீட்டில் கூடுவார்கள். அன்று முழுவதும் எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது. இரவு பத்து மணியளவில் பூஜை துவங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும் அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு கூறுவார்.

    இப்பூஜையில் செய்யப்படும் உப்பில்லாகொழுக்கட்டை மிகவும் விசேஷமானது. இதனை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு தர கூடாது. இந்த பூஜைக்கு புங்க மர இலைகளை இட்லி தட்டில் வைத்து அதன் மேல் கொழுக்கட்டைகளை செய்து வேக வைக்க வேண்டும். பிடி கொழுக்கட்டையோடு அல்லாமல் கொழுக்கட்டை அடை செய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

    மேலும் படிக்க... செவ்வாய் கிழமை துர்கையம்மனை வணங்கினால் திருமண தடை நீங்கும்...

    ஒரு நுனி இலையில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து புங்க இலைகளையும் புளிய மர இலைகளையும் பரப்பி அதன் மேல் செய்து வைத்த அடை கொழுக்கட்டைகள், மற்றும் வெற்றிலை, பாக்கு, பழங்களோடு தேங்காய் உடைத்து வைத்து விநாயகரையும் ஔவையாரையும் நினைத்து படைக்க வேண்டும்.

    பலன்கள்

    பூஜை செய்த நாளுக்கு மறுநாள் யாருக்கும் எந்த பொருளையும் கடனாகவோ, தானமாகவோ தருதல் கூடாது. இந்த பூஜையை கடைப்பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பர். பெண்களுக்கு செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மணமாகாத கன்னியர்க்கும் குழந்தையில்லா தம்பதிகளுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதனை ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழம்மையிலும் வணங்கி பூஜை செய்யலாம்.

    மேலும் படிக்க... வாஸ்து பகவானை வழிபட இன்று உகந்த நாள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Temple

    அடுத்த செய்தி