முன்னோர்கள் வழிபாடு என்பது நம்முடைய வாழ்வில் மிக இன்றியமையாத முக்கியமான ஒன்று. மாதா மாதம் வரும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாகும். அதிலும் ஆடி - புரட்டாசி - தை மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமான அமாவாசையாகும். சூரியனுடைய பாதை 6 மாதத்திற்கு ஒரு முறை மாறும். இதில் வடக்கு பயண பாதை தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலமாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தக்ஷிணாயன புண்ணிய காலமாகும். அதாவது தெற்கு நோக்கிய பயண பாதையாகும். இதில் தை மாத அமாவாசை மிக சிறப்பு வாய்ந்தது. இன்றைய நாளில் முன்னோர்கள் வழிபாடு செய்வது என்பது நம் சந்ததிகளுக்கு நல்லது.
அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கக்கூடிய விரத நாளாகும். அமாவாசை தினத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கலாம். அந்த அளவுக்கு மிகச் சிறந்த நாளாகும். ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை என 12 அமாவாசைகள் ஒரு வருடத்தில் வருகிறது. இதில் ஆடி அமாவாசை, மகாளயம் அமாவாசை, தை அமாவாசை மிக விசேஷமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பித்ரு தர்ப்பணம் என்றால் என்ன?
நம் முன்னோர் இருக்கும் போது நம்முடன் இருந்து நம்மை செம்மைப்படுத்தவும், நல்லறிவு கொடுப்பதும் வழக்கம். அவர்கள் மறைவுக்கு பின்னர் பித்ரு லோகத்தில் இருந்து நம் வாழ்வுக்குச் சகல அருளையும் வழங்கக்கூடிய நிலையை அடைவார்கள்.
ஏன் முன்னோர்களை வணங்க வேண்டும் :
ஒருவன் தான் பெற்றோர் - குல தெய்வம் - முன்னோர்களையும் வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றி பெற முடியும். அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த நம் முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசை தினங்களில் மிக சிறப்பாக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசை தினத்தில் சகல ஜீவராசிகளுக்கும் உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
தானம் வழங்குதல்:
இந்த அமாவாசை தினத்தின் போது அரிசி - பருப்பு - தாம்பூலம் - ஆடைகள் ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிட்டும். தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம்.
அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?:
அமாவாசை அன்று யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். ஆனால் தர்ப்பணம் என்பது தந்தையார் இல்லாதவர்கள் மட்டுமே செய்ய முடியும். மற்றவர்கள் முன்னோர்களை வணங்கி தானம் செய்தால் போதுமானது.
தை அமாவாசை 2022 எப்போது?
2022ல் தை அமாவாசை தை 18ம் தேதி ஜனவரி 31 திங்கட்கிழமை வருகிறது. இந்த வருடம் ஜனவரி 31ம் தேதி பிறபகல் 1.59 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி 12.02 மணி வரை உள்ளது. அதனால் ஜனவரி 31ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம்.
மேலும் படிக்க... தை மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.