காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக வீடுகள், வீட்டு மனைகள், நிலங்கள் உள்ளன. நாடு முழுவதும் ஏழுமலையானுக்கு 930 இடங்களில் அசையா சொத்துகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்திலும் ஏழுமலையான் சுவாமிக்கு சொத்துகள் உள்ளன. இந்த அசையா சொத்துகளின் இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.85,705 கோடியாகும். இது தவிர, தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என நவரத்தினங்களால் ஆன நகைகள், கிரீடங்கள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் ஏழுமலையானுக்கு சொந்தமாக உள்ளன.
மேலும் 9,259 கிலோ தங்கம், தங்க பிஸ்கெட்டுகளாக பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு வட்டியாக திருப்பதி தேவஸ்தானம் தங்கத்தையே பெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் மிகவும் பழமையான திருவாபரணங்கள் உள்ளன. மேலும் 10,500 கோடி ரூபாய்க்கு அதிக பணம் வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக உள்ளது. இது தவிர தேவஸ்தானத்தின் நித்திய அன்னதான அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகள் பெயரிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதிக்க பணம் வங்கிகளில் உள்ளது.
இந்த சூழலில் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள கொடிவலசா கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி நேற்று காலை திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் தேவஸ்தான உடைமைகள் துறை அதிகாரி மல்லிகார்ஜுனாவிடம் தனக்கு சொந்தமான ரூ. 70 லட்ச ரூபாய் வீட்டின் ஆவணங்கள் மற்றும் வீட்டின் சாவி ஆகியவற்றை கொடுத்து, இதனை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்குவதாக கூறினார். தற்போது இதுவும் ஏழுமலையானின் சொத்து கணக்கில் சேர்ந்துவிட்டது.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati