தற்போதைய காலகட்டத்தில் நாம் வாழும் வாழ்க்கை முறை, பின்பற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மனிதர்களின் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்து விடும் என்பது நிதர்சனம். மருத்துவ அறிவியலின் அசாதாரண வளர்ச்சி காரணமாக நம்முடைய வாழ்நாள் நீட்டிக்கப்பட்டாலும், உரிய மருத்துவ வசதியை அனைவராலும் பெற்று விட முடிவதில்லை. சமீபத்தில் 125 வயதான யோகி, சுவாமி சிவானந்தா நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
யோகா துறைக்கு வழங்கி வரும் பங்களிப்பிற்காக, வாரணாசியை சேர்ந்த 125 வயதான யோகா குருவான சுவாமி சிவானந்தா, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் இருந்து நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பெற்றார். வெண்ணிற உடையில் வெறும் காலுடன் விழாவில் பங்கேற்ற சுவாமி சிவானந்தா விருதை பெற்று கொள்ளும் முன் பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு என கீழே விழுந்து தலைவணங்கி நமஸ்காரம் செய்தார்.
விவரம் தெரியாமல் இந்த வீடியோவை பார்த்தவர்கள் தள்ளாத வயதில் இருக்கும் இந்த முதியவருக்கு எப்படியும் ஒரு 80 அல்லது 90 வயதிருக்கும், ஆனாலும் ஆக்ட்டிவாக இருக்கிறாரே என்று வியந்தனர். பின்னர் தான் அவருக்கு 125 வயது என்ற விவரம் தெரிந்து ஆச்சர்யத்தில் உறைந்து போயினர்.
மேலும் படிக்க... புதுச்சேரியில் இஸ்லாமியர் நடத்தும் ‘பாய் முருகன்’ கோயில்...
தினமும் யோகா செய்ய சரியான நேரம் எது..? சத்குரு தரும் விளக்கம்
125 வயதிலும் யோகா செய்து எந்த மருத்துவ சிக்கல்களும் இன்றி வாழ்க்கையை நடத்தும் அளவுக்கு வலிமையுடன் நிற்கும் மூத்த யோகா ஜாம்பவானாக இருக்கிறார் சுவாமி சிவானந்தா. வாரணாசி துறவியான சுவாமி சிவானந்தா 1896 ஆகஸ்ட் மாதம் பிறந்தவர். இந்த 125 வயதிலும் அவர் எப்போது தூங்கி எழுகிறார் தெரியுமா.? அதிகாலை 3 மணி.. பல ஆண்டுகளாகவே இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறாராம் இவர்.
அவரது உணவு பழக்கத்தை பொறுத்தவரை எண்ணெய் இல்லாத உணவை மட்டுமே தினமும் எடுத்து கொள்கிறார். ஆனால் இவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும் விஷயங்கள் நிறைய உள்ளன.
* சுவாமி சிவானந்தா எப்போதும் எண்ணெய் இல்லாத மற்றும் மசாலா இல்லாத மிகவும் எளிமையான உணவை உண்பதாக கூறுகிறார். பெரும்பாலும் அரிசி மற்றும் வேகவைத்த பருப்பு ஆகியவற்றையே சாப்பிட விரும்புகிறார்.
* பால் அல்லது பழங்கள் ஆடம்பரமான உணவுகள் என்று கருதும் இவர் அவற்றை சாப்பிடுவதையும் தவிர்த்து விடுகிறார்.
* அதே போல ஒழுக்கமான மற்றும் கண்டிப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறார்.
* இந்த வயதிலும் அவர் மெத்தையில் படுத்து தூங்குவது கிடையாது. தரையில் ஒரு பாயை விரித்து தான் தூங்குகிறார்.
* பஞ்சு தலையணைக்கு பதில் மரத்தாலான பலகையை தலையணையாக பயன்படுத்துகிறார்.
* தினசரி தவறாமல் யோகாவை பயிற்சி செய்கிறார். வசதி, ஆடம்பரங்கள் இல்லாத எளிமையான வாழ்க்கையை நடத்துகிறார்.
* தன்னலமின்றி பிறருக்கு சேவைகள் செய்வதை சிறு வயதிலிருந்து தற்போது வரை கடைபிடித்து வருகிறார்.
* ‘உலகமே என் வீடு’ என்ற தத்துவத்தை நம்பி அதற்கேற்ப செயல்படுகிறார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.