ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நாயகியின் நவராத்திரி - கதையும் காரணமும்

நாயகியின் நவராத்திரி - கதையும் காரணமும்

மகிஷாசுரமர்தினி

மகிஷாசுரமர்தினி

சோம்பல் குணத்தின் மொத்த வடிவமே “மகிஷாசுரன்” என்னும் எருமை தலை அரக்கன்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நவராத்திரி காலம் அனைவராலும் சிறப்பாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் புராண கதையும் அதன் காரணமும் அறிந்து கொள்வோமா?

  கதை: முன்னோர் காலத்தில் வரமுனி என்ற பெரும் முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் அவரிலும் பெரிய முனிவர்களை பார்க்கும் போதெல்லாம் அகந்தை கொண்டு அவமரியாதை செய்து வந்தார். அதனால் அவரை “மகிஷம்” (எருமை) ஆக போகும் படி முனிவர்கள் சாபம் இட்டனர்.

  அதே வேளையில் ரம்பன் என்ற அசுரன் அக்னி தேவனை நோக்கி தவம் இருந்து “தனக்கு வல்லமை  பொருந்திய மகன் வேண்டும்” என்ற வரம் கேட்டான், அதற்கு அக்னி தேவன் “நீ எந்த பெண்ணை மிகவும் மோகிக்கிறாயோ அவள் மூலம் நீ கேட்ட பிள்ளையை பெறுவாய்” என்று வரம் அளித்தார். அவன் மிகுந்த உற்சாகத்துடன் வரும் வழியில் முதலில் கண்டது ஒரு காட்டு எருமையை!

  வரம் வேலை செய்தது, சாபம் பலித்தது! மகிஷாசுரன் பிறந்தான். அவன் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்து “தனக்கு மரணம் ஒரு கன்னி பெண்ணால் தான்” என்று வரம் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர், மனிதர் அனைவரையும் தொல்லை செய்ய துவங்கினான். பிறகு அனைவரும் அன்னை மகா சக்தியை வேண்டினர்.

  முப்பெரும் தேவியர் ஒரு உருவம் கொண்டதை போல், அனைத்துலக தெய்வங்கள் தம் அஸ்திரங்கள் தந்துவிட அன்னை வந்தாள், மஹிஷனை வென்றாள். மக்கள் துதிக்க மனம் குளிர்ந்தாள்.

  காரணம்:

  மஹிஷம் - எருமையை நம் உடம்பில் இருக்கும் சோம்பல், அசைவின்மை, மனசோர்வு முதலிய தீய குணங்களின் வெளிப்பாடு என்கிறார்கள் . அசையாது இருப்பவனை கூட “எருமைமாடு” என்று திட்டுபவர்கள் இன்றும் உண்டு தானே. அத்தகைய சோம்பல் குணத்தின் மொத்த வடிவமே “மகிஷாசுரன்” என்னும் எருமை தலை அரக்கன்.

  அன்னையோ முப்பெரும் தேவியர் (சரஸ்வதி, மஹாலட்சுமி, பார்வதி) ஒன்றிணைந்து வந்தாள். அத்தகைய சோம்பல் குணத்தை விரட்ட அறிவு, அழகு, ஆற்றல் மூன்றோடு கூட வைராக்கியமும் கொண்டு அகந்தையை அழித்தாள். இதனையே அபிராமி அந்தாதியும் விளக்குகிறது.

  சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்

  வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்

  அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்

  கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே

  என் அன்னை சிவனின் மனைவி, சௌந்தர வடிவுடைய சுந்தரி. என் அகம், புறம், பந்த பாசம் யாவும் ஆள்பவள். சிவந்த நிறமுடைய அன்னை அன்று ஒரு நாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் நினைவில் கொண்டுள்ளேன்.

  தீய குணங்களை விரட்டி, ஆற்றல் கொண்டிருப்போம், ஆசி அளித்திடுவாள், அகிலம் ஆள வைத்திடுவாள், அன்னை பராசக்தி!

  - விஷ்ணு நாகராஜன்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Navarathri