குழந்தை பாக்கியத்தை தரும் தூர்வாஷ்டமி விரதம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

பிள்ளையார்

நாளை தூர்வாஷ்டமி... விநாயகரை அருகம்புல் கொண்டு அர்ச்சித்தால் தீராத கடனும் தீரும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்...

 • Share this:
  இன்றைய நாகரீக உலகில் அறிவியல் எவ்வளவு தான் வளர்ந்து கொண்டே இருந்தாலும், குழந்தையின்மை ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது. திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்று விவாகரத்து கேட்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. மருத்துவரை சந்தித்து குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், நமது முன்னோர்கள் வகித்துள்ள சில பாரம்பரியமான விரதங்களையும், அதன் முறைகளையும் கடைப்பிடித்தால் குழந்தை நிச்சயமாக கிடைக்கும் என்பது உண்மை.

  குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக நம்முடைய முன்னோர்கள் தூர்வாஷ்டமி விரதத்தை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தூர்வாஷ்டமி விரதம்

  இந்த விரதம் சந்ததியை ஒரு உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், சந்ததியை வளர்ப்பதற்கும், சந்ததியின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணைபுரியும். ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். இன்று அருகம் புல்லை பூஜை செய்ய தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம். அதிகாலையில் நீராடி விநாயகரையும், சிவபெருமானையும் சேர்த்து வணங்கி பூஜை விரதத்தை தொடங்க வேண்டும். பூஜையறையில் அவல், பொரி, பால், வாழைப்பழம் படைத்து, விநாயகர் அகவல், 108 போற்றி, சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிப்பது நல்லது. மாலையில் கோயிலில் விநாயகர், சிவனுக்கு விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.

  தூர்வாஷ்டமியில் விநாயகர் வழிபாடு ஏன்?

  அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக கருதப்படுகிறது தூர்வாஷ்டமி. அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நலம் பயப்பவை தான். ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர்.  ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர், சதுர்த்தியிலும் தூர்வாஷ்டமியிலும் பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும். அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் என்னும் ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஞான பண்டிதன் கணேசர். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் ஏற்படும்.

  இந்த தூர்வாஷ்டமி விரதத்தை யார் யார் கடைப்பிடிக்கலாம்?

  தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.

  வழிபட வேண்டிய முறை 

  காலையில் நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, சுத்தமான முறையில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு, விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர், சுத்தமான இடத்தில் அருகம்புல் பறித்து வந்து வீட்டில் ஒரு தட்டில் வைக்கலாம் அல்லது பலகையின்மேல் அருகம்புல்லை வைத்து அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு வணங்க வேண்டும். பலகையின் மேல் நமக்கு இஷ்ட தெய்வத்தை வைத்து பூஜிக்கலாம்.

  சொல்ல வேண்டிய ஸ்லோகம் 

  "ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்"
  என்று சொல்லி பூஜிக்க வேண்டும். ஹே அருகம்புல்லை, நீ அம்ருதத்திலிருந்து உண்டானாய். தேவர்களாலும் அஸுரர்களாலும் வணங்கப் படுகிறாய். எங்களுக்கு ஸௌபாக்யத்தையும் குழந்தை செல்வத்தையும் தந்து அனைத்து கார்யங்களிலும் வெற்றியடைய அருள் புரிய வேண்டும். எவ்வாறு நீ கிளை உபகிளை என்று பரந்து விரிந்து பூமி முழுவதும் பரவுகின்றாயோ அது போன்றே எனது வம்சத்தையும் மகன், மகள், பேரன், பேத்தி அவர்களுக்கு குழந்தைகள் என விரிவடையச் செய்வாயாக என்பதுதான் இந்த ஸ்லோகத்தின் விளக்கம்...

  மேலும் படிக்க... பழனி முருகன் சிலையில் ஏன் நவபாஷாணம் வைக்கப்பட்டது தெரியுமா?

  கிடைக்கும் நன்மைகள் 

  இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதனால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். நம் குலத்தை வளமாக வைத்துக்கொள்வதற்கும், குறைவிலா உணவு, நீர், ஆடை கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள், புத்திமான்களான வீரர்களான புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நல்லது...

  மேலும் படிக்க... சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர்...   

  தோஷங்கள் நீக்கும் விநாயகர்... 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய பிள்ளையார்கள்..

  விநாயகர் சதுர்த்தி வரலாறு...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: