வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பெருமாள்பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, ஆண்டாள் கிளி மாலை, வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்களோடு சொர்க்க வாசலுக்கு புறப்பாடு கண்டளிருனார். இதில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை 7:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 4ம் தேதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று 13ம் தேதி நம்பெருமாள், மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தரருளினார்.
வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று 14ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, பரமபத வாசலுக்கு வந்தடைந்தார். பின்னர் அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து 24ம் தேதி வரை ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா கட்டுப்பாடுகளால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் பக்தர்களை தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்க உள்ளனர். அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் கோயில் நுழைவாயிலில் இருந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலமே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வளாகத்தின் உட்புறப் பகுதியில் 117 சிசிடிவி கேமராக்களும் கோயில் வெளிப்புறப் பகுதியில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சொர்க்கவாசல் திருவிழாவிற்காக வரும் பக்தர்களின் தேவைக்காக காவல் உதவி மையம் 70 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது இதேபோன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களின் நம்பர்களை பதிவு செய்யக்கூடிய வகையில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் வழிகாட்டுதலுக்காக 32 இடங்களில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு 14 இடங்களில் உயர் கோபுரங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் படிக்க... வைகுண்ட ஏகாதசி: மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Srirangam, Trichy, Vaikunda ekadasi