மகா சிவராத்திரியை முன்னிட்டு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மலர்கள், பழங்கள், மின்சார சரவிளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு காளஹஸ்தி கோவில் ஜொலிக்கிறது. சைவ ஷேத்திரங்களில் வாயு சேத்திரமாக திகழும் காளஹஸ்தி சேத்திரத்திற்கு ராகு கேது தோஷ நிவாரண பரிகார சேத்திரம் என்ற பெயரும் உள்ளது. எனவே, சிவ வழிபாடு மற்றும் பரிகார பூஜைகள் ஆகியவற்றை மேற்கொள்ள தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்திக்கு வருகின்றனர். காளஹஸ்தி கோவிலில் வாயு லிங்கேஸ்வரர், ஞானப்பிரசுன்னாம்பா சமேதராக எழுந்தருளி இருக்கிறார். இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு தற்போது இந்த கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இன்று மகா சிவராத்திரி ஆகையால் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்காக வந்திருக்கின்றனர். இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மலர்கள், பழங்கள் மற்றும் மின்சார விளக்குகள் ஆகியவற்றால் கோவில் முழுமையாக அலங்கரிக்கப்பட்டது. இது தவிர கோவிலில் உள்ள பெரிய நந்தி ஒன்றுக்கு முழு அளவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி கும்பிடுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான நந்தி வாகன புறப்பாடு திரு மாட வீதிகளில் நடைபெற உள்ளது.