ஒரு மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும். அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் எனவும் பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் எனவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதே போல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலம் ஆகும். ஆவணி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.
மகாளய பட்சம் என்றால் என்ன?
மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்பதே ஆலயம். அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும். இந்த மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என்றும் கருடபுராணம் கூறுகிறது.
அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களை நினைக்கிறார்களா? உணவும் நீரும் வழங்குவார்களா? என்ற ஏக்கத்தோடு வருவார்கள். அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களளின் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும்?
மனிதனாகப் பிறந்தவர்களுக்கு ஐந்து கடமைகள் இருப்பதாக இந்து மதம் சொல்கிறது. அவை பித்ரு யக்ஞம்: முன்னோருக்கு முறைப்படி தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை செய்வது.
தேவ யக்ஞம்: கடவுள் வழிபாடுகளை விரதங்களை முறைப்படி கடைப்பிடிப்பது
பூத யக்ஞம்: பசு, ஆடு, காக்கை, மீன் போன்ற மற்ற உயிரினங்களுக்கும் உணவளித்தல்
மனித யக்ஞம்: சக மனிதர்களான நோய்வாய்ப்பட்டவர்கள், யாசகர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவளிப்பது
வேத யக்ஞம்: தர்மநெறி தவறாமல் வாழ்வது.
இந்த 5 யக்ஞத்திலும் பித்ரு யக்ஞம் மிகவும் புனிதமானது. காரணம் அதிலேயே மற்ற அனைத்துக் கடமைகளும் அடங்கி விடுகின்றன என்பது நம்பிக்கை
மகாளய அமாவாசையின் சிறப்பு
மகாளய அமாவாசைக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த நாளில் நாம் நம் குல முன்னோருக்கு மட்டுமன்றி காருண்ய பித்ருக்கள் எனப்படும் மற்றவர்களுக்காவும் செய்கிறோம். அந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகள் காருண்ய பித்ருக்களையும் திருப்திப்படுத்துகிறது என புராணங்கள் கூறுகின்றன.
காருண்ய பித்ருக்கள் யார்?
நாம் நமது வாழ்நாளில் பலரோடு நெருக்கமாகப் பழகுகிறோம். சிலர் நமது உறவினர்களைப் போலவே நெருக்கமாக இருப்பார்கள். ஆசிரியர்கள், குரு, பெற்றோரின் நெருங்கிய நண்பர்கள், நமது நண்பர்கள் என்று பலர் நம்மோடு நெருக்கமாக இருப்பார்கள். சாதாரண அமாவாசையின் போது செய்யப்படும் தர்ப்பணமானது நமது ரத்த சம்பந்தமுள்ள முன்னோரை அதாவது நம் குல முன்னோரை மட்டுமே சேரும்.
ஆனால் மகாளய அமாவாசையின்போது செய்யப்படும் படையல், தானம் போன்றவை நமக்குப் பிரியமானவரகளாக இருந்து இறைவனடி சேர்ந்த அனைவரையும் சென்று சேரும் என்று கூறப்படுகிறது. இவர்களையே காருணய பித்ருக்கள் என்று சொல்கிறோம். அதனாலேயே மற்ற அமாவாசைகளை விட மகாளய அமாவாசை மிகவும் ஏற்றம் பெற்றது என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க... மகாளய பட்சம் 2021 | மகாளய பட்ச தினம், திதி, நட்சத்திரம்
முன்னோர் வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?
மகாளய பட்ச அமாவாசையின் போது முன்னோர்களை வழிபடாவிட்டால் திருமணத்தடை, பணம் சேராமல் போதல், பணியிடத்தில் கெட்ட பெயர், கணவன் - மனைவிக்குள் பிரிவுகள், குடும்பத்தில் சச்சரவுகள், தீராத கடன் தொல்லை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று சிலருக்கு இருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏதாவது வரலாம். அதற்குக் காரணம் அவர்கள் பித்ருக்களுக்கு முறையாக எள்ளும் நீரும் கொடுக்காததாலேயே ஆகும்.
வழிபாடு செய்யும் முறை
இப்படித்தான் செய்யவேண்டும் என்று கண்டிப்பான வழிமுறைகள் ஏதும் இல்லை. ஆனால் செய்வதை மழு மனதாக பூரண கவனத்துடன் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிடில் பலன் கிட்டாது என்பது விதி. அவரவர் குல வழக்கப்படி சைவச் சாப்பாடு செய்து துறவிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும் அன்னதானம் செய்யலாம். அப்படிச் செய்யும் அன்னதானமானது நம் பித்ருக்களைச் சென்று சேர்ந்து திருப்திப்படுத்துகிறது. அவர்கள் ஆசிர்வாதம் நமக்குக் கிடைப்பதால் வாழ்க்கையில் வெற்றியும், மங்களமும் நிறைந்திருக்கும்.
பித்ரு தர்பணம் கொடுக்க இயலதா வயதானோர்களுக்கான சில எளிய வழிமுறைகள்
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள். அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும்.
அல்லது சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்னு வலது கையில் எள் எடுத்து பின்பு தூய பாத்திரத்தில் தூய நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும் பின்பு அந்த நீரை கடல், ஆறு, ஏரி, குளம் பகுதிகளில் விட்டலாம்.
இந்த வருடம் மகாளய பட்சம் அக்டோபர் 6ஆம் தேதி வருகிறது. முன்னோர்களையும், உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் என்று அனைத்து காருண்ய பித்ருக்களையும் நினைத்து வழிபாடு செய்யுங்கள். இயன்ற அளவு தானங்கள் செய்து முன்னோரது அருளாசியை பெறுங்கள்...
மேலும் படிக்க... புரட்டாசி அமாவாசை, மகாளய பட்சம் 2021... வழிபட வேண்டிய முறைகளும் கிடைக்கும் பலன்களும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mahalaya Amavasai, Purattasi