சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் காலம் வைகாசி மாதம் ஆகும். இம்மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி மிகவும் விசேஷமானது. முருகப் பெருமானுக்கு கார்த்திகை மாதம் மிகவும் உகந்ததாகும். அதற்கடுத்த உகந்த மாதம் வைகாசி மாதம் தான். விசாகன் என்ற அசுரனை வதம் செய்தது இந்த மாதத்தில் என்பதால் தான் வைகாசி விசாகம் பெருமளவு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வைகாசி வளர்பிறை சஷ்டியில் முருகனை எப்படி வழிபட வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதனை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்....
வழிபடும் முறை
வைகாசி வளர்பிறை சஷ்டி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி பூஜை அறையை சுத்தம் செய்து, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபட வேண்டும். சந்தனம் மற்றும் மஞ்சள் இட்டு கொண்டு வாசனை மிகுந்த மலர்களால் முருகப்பெருமானை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் வேல் வைத்து இருப்பவர்கள் அந்த வேலுக்கு பாலாலும், பன்னீராலும் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் பொட்டு வைப்பது நல்லது.
நைவேத்தியம்
நைவேத்தியம் வைக்க முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற ஏதாவது ஒன்றை வைத்து முருகனை அன்றைய தினம் முழுவதும் மனதார துதித்து வழிபடுவது யோகம் தரும். அல்லது சித்திரன்னங்கள் எனப்படும் கலவை சாதங்களை செய்தும் படைக்கலாம்.
மேலும் காலை முதல் மாலை வரை உணவேதும் உண்ணாமல் உபவாசம் இருந்து முருகன் கவசம், சண்முக கவசம், கந்த சஷ்டி கவசம், ஸ்லோகங்கள் மற்றும் முருகன் மந்திரங்களை உச்சரிப்பது யோகம் தரும்.
பின்னர் மாலை வேளையில் கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே முருகனுக்கு பூஜை செய்யலாம். பிறகு முருகனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்த பின் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
Also see...
கந்தசஷ்டி விரதம் இருப்பதினால் கிடைக்கும் பலன்கள்
பலன்கள்
வளர்பிறை சஷ்டியில் முருகப்பெருமானுக்கு வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக இருக்கும் பாதிப்புகள் நீங்கும். அசுரர்களை அழித்த முருகப்பெருமானை வணங்கும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் அசுரர்கள் போன்ற எதிரிகளும், பகைவர்களும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களும் ஒழிந்து போவர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.