நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம் உயிரோடு கலந்து உறவாடும் தெய்வம் பிள்ளையார். ‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் பழகி வரும் மொழிகள்..
எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் அனைத்தும் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு பிள்ளையாருக்கு உண்டு. உலகத்தில் பல நாடுகளில் பிள்ளையார் வழிபாடு காணப்படுகிறது. அந்த வகையில் நமது புராணங்களில் பிள்ளையாரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
பிள்ளையாரின் பெருமைகள் கூறும் புராணங்கள்
1. பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது தங்களுடைய ஆயுதங்களை வன்னி மரத்தடியில் ஒளித்து வைத்ததாகவும், அதனை விநாயகப் பெருமான் பத்திரமாக காத்ததாகவும் சொல்லபடுகிறது.
2. வியாசருக்கு பிள்ளையாரே மகாபாரத காவியம் எழுத துணை நின்றார். அவரே அதனை எழுதவும் செய்தார்.
3. அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடைத்த போது. அதனை மீண்டும் இப்பூவியில் பிரவாகிக்க பிள்ளையார் காக்கை ரூபம் எடுத்து வந்ததாக புராணத்தில் உள்ளது.
4. முருகப்பெருமான் வள்ளியை மணக்க, யானை ரூபம் எடுத்து விநாயகப் பெருமான் துணை நின்றார் என்று கூறப்படுகிறது.
5. தேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார். இது குறித்த புராணக் கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.
6. விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர்.
7. புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.
தடைகள் மற்றும் இடையூறுகளை நீக்குவதால் இவரை விக்னேஷ்வரர் என்று எல்லோரும் அழைக்கின்றனர். எனவே தான் எந்த காரியத்தையும் தொடங்கும் முன்னால் பிள்ளையார் சுழி போடுவது வழக்கமாக உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. எல்லா தெய்வங்களும் இந்தப் பிள்ளையாருக்குள் அடக்கம். இவரை வணங்காமல் எந்தப் பூஜையும், மகா ஹோமங்களும் கூட முற்றுப் பெறாது என்பதும் கூட யாவரும் அறிந்ததே.
மேலும் படிக்க... சங்கடங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் முறை... இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.