ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சனி பெயர்ச்சி அள்ளி கொடுக்கும் சச யோகம் – எந்த ராசிகளுக்கு யோகம்?

சனி பெயர்ச்சி அள்ளி கொடுக்கும் சச யோகம் – எந்த ராசிகளுக்கு யோகம்?

சனிபெயர்ச்சி

சனிபெயர்ச்சி

Sanipeyarchi | இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சனி பெயர்ச்சியால், சச யோகம் உண்டாகிறது. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஆட்சி மற்றும் உச்சமாகும் வீடுகள் உள்ளன.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வேத ஜோதிடத்தில் பல விதமான யோகங்கள் உள்ளன. அதில், சூரியன், சந்திரன் ஆகிய ஒளி கிரகங்கள் மற்றும் ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்கள் தவிர்த்து, மீதமுள்ள ஐந்து கிரகங்கள் குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட அமைப்பில் அமர்வது அல்லது சஞ்சரிப்பது பஞ்ச மகா புருஷ யோகம் என்று கூறப்படும். பஞ்ச மகா யோகம் என்பது ஐந்து கிரகங்களான, குரு, சனி, சுக்ரன், செவ்வாய் மற்றும் புதன் ஆகியவற்றால் உண்டாகும்.

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு யோகத்தை வழங்கும்.

* குருவால் ஏற்படும் பஞ்ச மகா புருஷ யோகத்துக்கு ஹம்ச யோகம் என்று பெயர்.

* சுக்ரனால் ஏற்படும் பஞ்ச மகா புருஷ யோகத்துக்கு மாளாவ்ய யோகம் என்று பெயர்.

* புதனால் ஏற்படும் பஞ்ச மகா புருஷ யோகத்துக்கு பத்ர யோகம் என்று பெயர்.

* செவ்வாயால் ஏற்படும் பஞ்ச மகா புருஷ யோகத்துக்கு ருசக யோகம் என்று பெயர்.

* சனியால் ஏற்படும் பஞ்ச மகா புருஷ யோகத்துக்கு சச யோகம் என்று பெயர்.

இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சனி பெயர்ச்சியால், சச யோகம் உண்டாகிறது. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஆட்சி மற்றும் உச்சமாகும் வீடுகள் உள்ளன. அவ்வாறு, ஒரு கிரகம் தனது ஆட்சி அல்லது உச்ச ராசியில், கேந்திர ஸ்தானங்கள் என்று கூறப்படும், 1 ஆம் வீடாகவோ, 4 ஆம் வீடாகவோ, 7 ஆம் வீடாகவோ அல்லது 10 வீடாகவோ அமைந்தால், அப்போது பஞ்ச மகா புருஷ யோகம் உண்டாகும்.

சச யோகத்தின் அடிப்படை விதி: சனி பகவான், அதன் ஆட்சி வீடுகளான மகர ராசி, கும்ப ராசி மற்றும் உச்ச வீடான துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகும் போது, இந்த யோகம் ஏற்படும். எனவே, சனி பெயர்ச்சி காலத்தில், 8 முதல் 9 ஆண்டுகள் மட்டுமே இந்த யோகமான காலம் தோன்றும். அதுவும் எல்லா ராசிகளுக்கும் சனியால் சச யோகம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சனி ஆட்சியாக கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், எந்த ராசிகளுக்கு சச யோகம் ஏற்படும் என்று பார்க்கலாம்.

கும்ப ராசி சனி ஆட்சி பெற்று ஜென்ம சனியாக பெயர்ச்சி ஆகி இருப்பது, கும்ப ராசியினருக்கு சச யோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்ததாக, ரிஷப ராசிக்கு 10 ஆம் வீட்டில் சனி ஆட்சி பெறுவதால், ரிஷப ராசியினருக்கு சச யோக அமைப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவதாக, சிம்ம ராசிக்கு 7 ஆம் வீட்டில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால், சிம்மத்தினருக்கும் சச யோகம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக, விருச்சிக ராசியின் 4 ஆம் வீடான கும்பத்தில் சனி ஆட்சி பெற்று அமர்வதால், சச மகா யோகம் ஏற்பட்டுள்ளது.

சச மகா யோகத்தின் பலன்கள்

பொதுவாகவே ஒரு கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமர்ந்து, அது உங்கள் ராசிக்கு சாதகமாக இருந்தால், அந்த கிரகம் அமர்ந்திருக்கும் வீடு சார்ந்த அனைத்து பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.

கும்ப ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாம் கால், ஜென்ம சனியாக அவதிப்பட நேரிடும் என்று பல விதமான அச்சுறுத்தல் இருந்தாலும், இந்த பெயர்ச்சி மகா யோகத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. கர்ம காரகனான சனி பகவான், கும்ப ராசியினருக்கு நெருக்கடிகளைத் தந்தாலும், மற்ற ராசிகள் ஏழரை சனியில் அவதிப்பட்டதைப் போல அல்லாமல், நற்பலன்களையும் கொடுத்து விடுவார்.

சச மகா யோகம் ஏற்படும் காலத்தில், ஜாதகர்கள் மிகப்பெரிய இடத்துக்கு செல்வார்கள். வேலை, வணிகம், மகிழ்ச்சியான வாழ்க்கை, செல்வாக்கு, சொத்து, பெயர் புகழ், அதிகாரம் என்று எல்லாமே சாதகமாக அமையும்.

அரசியல், உயர் பதவிகள், தொழில், ரியல் எஸ்டேட், வக்கீல், ஆகிய துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி காண்பார்கள்.

கடினமாக உழைப்பார்கள், நேர்மறையாக சிந்திப்பார்கள், தன்னைத் தானே உருவாக்கிக் கொள்வார்கள். இதனாலேயே சமூக அந்தஸ்து உயரும். அடிமட்டத்தில் இருந்தாலும், விரைவாக வளர்ச்சி காண்பார்கள். ஆன்மீகத்தில், தான தர்மங்களில், தொண்டு காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்

மிகவும் அரிதான சச மகா யோகம்

பஞ்ச மகா புருஷ யோகம் என்பது ஒரு சமயத்தில் நான்கு ராசியினருக்கு மட்டுமே ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ராசியில் இருந்து, 1 ஆம் வீடு (ராசி), 4 ஆம் வீடு, 7 ஆம் வீடு மற்றும் 10 ஆம் வீட்டில் ஏதேனும் கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமர்ந்தால், உங்களுக்கு அந்த கிரகத்தின் மகா யோகம் அமைந்துள்ளது.

சனியால் அதிக நன்மைகள் பெறுவது மேஷம், மகரம், கும்பம், ரிஷபம், மற்றும் துலாம் ஆகிய ஐந்து ராசிகள் தான். ஆனால், மேஷம் மற்றும் துலாம் ராசிக்கு சச மகா யோகம் என்ற அமைப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏற்படும்.

மற்ற கிரகங்களால் ஏற்படும் பஞ்ச மகா புருஷ யோகம் ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்ந்து விடும். ஆனால், சனியால் ஏற்படும் சச யோகம் அவ்வாறு நிகழாது. சனி பகவானின் அடுத்த சச மகா யோகம் ஏற்பட வேண்டும் என்றால், அடுத்த 16 – 18 வருடங்கள் காத்திருக்க வேண்டும். சனி துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகும் போது தான் இந்த யோகம் உண்டாகும்.

First published: