இன்று சனி சர்வ ஏகாதசி விரதம்... மகாவிஷ்ணுவை வழிபட சகல பாவங்களும் நீங்கும்...
இன்று சனி சர்வ ஏகாதசி விரதம்... மகாவிஷ்ணுவை வழிபட சகல பாவங்களும் நீங்கும்...
விஷ்ணு
சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. அதிலும் ஏகாதசியுடன் கூடிவரும் சனிக்கிழமை என்றால் மிகவும் விசேஷம். இன்றைய தினம் சனிக்கிழமையுடன் கூடிய ஏகாதசி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது.
பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால் ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. இந்த திதியில் விரதம் இருந்தால் தீவினைகள் எல்லாம்அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், உணவு இவற்றை தவிர்த்து விரதம் இருப்பது புண்ணியம்.
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருளால் பெறுவோம் என்பது ஐதீகம்.
விரதம் இருக்கும் முறை
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை செய்துவிட்டு மகாவிஷ்ணுவை மனதில் வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் இயலாதவர்கள் முழு வேகவைத்த உணவை சாப்பிடாமல் பால், பழங்கள், அவல் சாப்பிடலாம். மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம். ஓம் நமோ நாராயணாயா என்று கூறி வணங்க துன்பங்கள் துயரங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும்.சகல பாவங்களும் நீங்கும்...
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.