Home /News /spiritual /

உலக மக்கள் நன்மைக்காக பச்சைப் பட்டினி விரதம் இருந்த மாரியம்மன்... இன்று சித்திரை தேரில் ஏறினாள்...

உலக மக்கள் நன்மைக்காக பச்சைப் பட்டினி விரதம் இருந்த மாரியம்மன்... இன்று சித்திரை தேரில் ஏறினாள்...

சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் திருத்தேரையொட்டி, சமயபுரம் மட்டுமன்றி, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் சக்தி தலங்களில் முதன்மையாக கருதப்படுவது, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அளிக்கும் மாரியம்மன் அருள்பாலிக்கும் இங்கு தினந்தோறும் திருவிழா என்றபோதும், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கும் பூச்சொரிதல் விழா மற்றும் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கும் சித்திரைத் தேர் பெருவிழா வெகு பிரசித்திப் பெற்றது.

பச்சைப்பட்டினி

பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி, தொடர்ந்து 28 நாட்கள், உலக மக்கள் நன்மைக்காக மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சிறப்புக்குரியது. பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும் மாரியம்மனுக்கு, இந்த நாட்களில் இளநீர், கரும்புச்சாறு, துள்ளு மாவு போன்றவை மட்டுமே பிரசாதமாக படைக்கப்படும். மற்ற நைவேத்தியங்கள் படைக்கப்படாது. மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் நிறைவுச் செய்யும் நாளில், சித்திரைத் தேர் பெருவிழா  தேரோட்ட கொடியேற்றம் நடக்கும்.

ஓம்சக்தி.. பராசக்தி..

இத்தகைய சிறப்புமிக்க சித்திரைத் தேர் பெருவிழா கடந்த, 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு மாரியம்மன் கேடயத்தில் எழுந்தருளினார். அன்று முதல் தொடர்ச்சியாக, சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை என பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. திருத்தேரில் மாரியம்மன் எழுந்தருள, காலை, 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. "ஓம்சக்தி.. பராசக்தி." என்ற கோஷங்கள் முழங்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சமயபுரம் திருத்தேரையொட்டி, சமயபுரம் மட்டுமன்றி, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க... கம்பீரமாக வலம் வரும் சமயபுரம் மாரியம்மனின் புகைப்படங்கள்...

கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Trichy

அடுத்த செய்தி