முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...

மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...

சபரிமலை

சபரிமலை

எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். அப்படி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...

1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும் வரை முடிவெட்டுதல், சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

2. மெத்தை, தலையணை உபயோகிக்காமல், தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.

3. பேச்சைக் குறைத்து மவுனத்தை கடைப்பிடித்தல் வேண்டும்.

4. மற்றவர்களிடம் சாந்தமாக பழக வேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது.

5. விரத நாட்களில் பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் கருத வேண்டும். விரதகாலத்தில் பிரம்மச்சாரியத்தை கடுமையாக கடைபிடிக்கவும். மனதளவிலும் பெண்ணை நினைக்கக்கூடாது.

6. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருக்க வேண்டும். அப்படி வசதி இல்லையென்றால் மாலை அணிந்தவர்கள் வேறு இடத்தில் தங்கியிருத்தல் நல்லது.

7. அணிந்திருந்த மாலை அறுந்துபோனால் அதை செப்பனிட்டு அணிந்து கொள்ளலாம். இதில் தவறில்லை. மன சஞ்சலம் அடைய வேண்டாம்.

8. மாலை போடும் சமயத்தில் பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மன சஞ்சலம் இருந்தால் மாலை போடுவதை தள்ளிப் போடுதல் நல்லது.

9. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் பக்தியும் மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

10. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

11. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று:

12. தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்.

13. தன் புலன்களை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றை தூய்மைப்படுத்துதல்,

14. தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்க வைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.

15. மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும்.

16. எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம்.

17. ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால், தலைக்கு எண்ணெய் வைக்கவோ அல்லது எண்ணெய் குளியலோ மேற்கொள்ளக்கூடாது.

18. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கினால், மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர, கடைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ எங்கும் உண்ணக்கூடாது.

19. மாலை அணிந்தவர்கள், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்துமுடித்த பின் விபூதி இட்டு, விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதேப் போல் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளித்து, காலையில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும்.

20. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.

படிகள் ஏறஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்.

இந்த வழிமுறைகளை கடைபிடித்து விரதம் முடிந்து மலைக்கு கிளம்பும் முன் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை நடத்தி பிரசாதம் தந்து உணவளிப்பது சிறப்பு. குருசாமி வீடு, கோயிலில் இருமுடிக்கட்டு பூஜை நடத்தலாம். கிளம்பும்போது ‘போய் வருகிறேன்’ எனச் சொல்லக்கூடாது. வீடு திரும்பியதும், குருசாமி மூலம் மாலை கழற்றவும். இருமுடி அரிசியை பொங்கியும், பிரசாதமாக எல்லோருக்கும் தர வேண்டும். விரதகாலம் வழங்கிய நற்பழக்கங்களை ஆயுள் முழுக்க பின்பற்றுவதே, ஐயப்பனின் பூரண அருளைத் தரும்.

மேலும் படிக்க... Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வோருக்கு கேரளா அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா?

First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimala