பூமத்திய ரேகையில் இருந்து தென் திசையில் பயணித்து கொண்டிருக்கும் சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை வடக்கு நோக்கி திருப்பும் நாள் ரதசப்தமி நாளாகும். இதனை தட்சிணாயனத்திலிருந்து உத்திராயணம் நோக்கி தன்னுடைய பயணத்தை சூரியன் துவக்கும் நாள் என்றும் கூறுவார்கள்.
ரதசப்தமி நாளன்று கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி விரதம் இருந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பது ஒரு சில மாநிலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரத சப்தமி தினத்தை ஒரு திருவிழாவாக கொண்டாடும் வழக்கம் வைஷ்ணவ கோவில்களில் உள்ளது. அந்த வகையில் இம்மாதம் 28ஆம் தேதி ரத சப்தமி நாளாகும்.
அன்றைய தினம் காலை துவங்கி இரவு வரை திருப்பதியில் ஏழுமலையான் ஏழு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாளிக்க இருக்கிறார். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா நடைபெறும். ஆகையால் இந்த நாளுக்கு சின்ன பிரம்மோற்சவம் நாள் என்ற பெயரும் உள்ளது.
ஒரே நாளன்று ஏழுமலையானின் ஏழு வாகன சேவைகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் காரணத்தால் அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள்.
எனவே அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.
சாமி ஊர்வலத்தை கண்டு தரிசிப்பதற்காக அன்று அதிகாலை முதலே மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் பக்தர்கள் குவிந்து விடுவார்கள். எனவே சாமி ஊர்வலத்தை கண்டு தரிசிப்பதற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி, பால் போன்ற அடிப்படை ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் பணியில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இது தவிர பாதுகாப்பு, கண்காணிப்பு, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய விஷயங்களிலும் தேவஸ்தான நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. ரதசப்தமி நாள் அன்று அதிகாலை ஐந்தரை மணிக்கு துவங்கி எட்டு மணி வரை ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவையும், காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகன சேவையும்,பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன சேவையும் நடைபெறும்.
அதனை தொடர்ந்து பகல் 2 மணி முதல் மூன்று மணி வரை கோவில் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பகவிருட்ச வாகன சேவை, 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகன சேவை, 8 மணி முதல் ஒன்பது மணி வரை சந்திர பிரபை வாகன சேவை ஆகியவைகள் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் ஏழுமலையான் கோவிலில் கல்யாணம் உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் நடைபெறாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thai Month, Tirumala Tirupati, Tirupathi, Tirupati brahmotsavam