Home /News /spiritual /

ஈகைத் திருநாள்: முஸ்லிம் சகோதர மக்களின் ஆக முக்கியமான நந்நாள்!

ஈகைத் திருநாள்: முஸ்லிம் சகோதர மக்களின் ஆக முக்கியமான நந்நாள்!

(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)

சகோதர முஸ்லிம் மக்களின் ஆக முக்கியமான புனித நாள் ஈகைத் திருநாள். ’ரம்ஜான்’ என்று சக மக்களால் அழைக்கப்படும் இந்தப் பண்டிகையை ’ஈதுல் ஃபித்ர்’ என்றும் முஸ்லிம்கள் சொல்வதுண்டு.

  பிற மதத்தினரைப் போலன்றி சூரிய இயக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம்களின் நாள்காட்டி அமைவதில்லை. சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையிலேயே அவர்கள் மாதங்களைக் கணக்கிடுவர். இஸ்லாமிய நாள்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலானில் நோன்பு தொடங்குகிறது. சந்திர உதயத்தைப் பொருத்து அது ஆங்காங்கு சிறு கால வேறுபாடுகளுடன் தொடங்கும்.

  அந்த நாள் முதல் ரமலான் மாதம் முடியும் வரை முஸ்லிம்கள் நோன்பைக் கடைபிடிப்பர். நோன்பு முடிந்ததும் ரமலான் திருநாளாக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் சக மக்களுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.

  ரமலான் மாதம் முழுவதும் அவர்கள் சூரிய உதயம் தொடங்கி சூரியன் மறைவது வரை உண்ணாமல், பருகாமல் விரதத்தைக் கடைபிடிப்பர். மேலும், புகை பிடிப்பது, பாலியல் உறவு, தீயச் சொல் பேசுவது, தீய எண்ணங்களுக்கு இடங்கொடுப்பது, சண்டையிடுவது, வீண் பேச்சுப் பேசுவது, சோம்பல்வயப்படுவது என இவை எல்லாவற்றையும் ஒதுக்குவதும் நோன்பில் அடக்கம்.

  ‘முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்பு கட்டாயம்’ ‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் அது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் தூய்மையுடையவர்கள் ஆகிறீர்கள்’ என்கிறது இஸ்லாமிய இறைவாக்கு. (திருக்குர்ஆன் 2:183)

  முஸ்லிம்களின் 5 கடமைகளில் இந்த நோன்பும் ஒன்று. இறை நம்பிக்கை மற்றும் முஹம்மது நபிகளாரை இறைத்தூதராக ஏற்றல், தொழுகையில் ஈடுபடுதல், வாழ்வில் ஒருமுறையேனும் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளல், ஏழை-எளிய மக்களுக்கு ஜகாத் (நிதி) வழங்குதல் ஆகியன பிற நான்கு கடமைகள். இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயம் என்றபோதிலும் நோன்பிலிருந்து நோய்வாய்ப்பட்டோருக்கும் முதியவர்களுக்கும் இஸ்லாமிய இறை வாக்கு விலக்களிக்கிறது. ஆனாலும் அவர்கள் அதை ஈடுகட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்க வேண்டும். (திருக்குர்ஆன் 2:184)

  நோன்பைக் கடைபிடிப்பதன் வழியாகத் தாங்கள் மேன்மையான மானுடப் பண்புகள் பெறுவதாக முஸ்லிம்கள் அனுபவ பூர்வமாகக் கூறுகின்றனர். உணவு, நீர் முதலியன மானுடர்க்கு எத்தனை முக்கியமானவை என்பதைத் தாங்கள் உணர்வதற்கும், ஏழை எளியோருடன் நெருக்கம் பெறுவதற்கும், சக மக்களோடு தம்மை அடையாளம் காண்பதற்கும் நோன்பு வழிவகுப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

  அனைவரும் இணைந்து தொழுவதன் ஊடாகவும், கட்டியணைத்து அன்பைத் தெரிவிப்பது வழியாகவும் இறைவன் முன் எல்லாரும் சமம் என உணர்தல் முஸ்லிம்களுக்கு எளிதாகிறது.

  ரமலான் மாதத்திற்கு இஸ்லாத்தில் இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. நபிகள் நாயகத்தின் வழியாக உலக மக்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டது. அவ்வாறு இறை வாக்கு நபிகளுக்கு இறங்கத் தொடங்கியதும் ஒரு ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒன்றில்தான்.

  இந்த ஆண்டு உலகெங்கும் கொரோனா பாதிப்பில் உள்ளது. முஸ்லிம்கள் வழக்கம் போல இம்முறை கூடித் தொழுது, கட்டித்தழுவி அன்பைத் தெரிவிக்க இயலாமல் போனதை ஒரு குறையாக உணர்ந்தாலும், எல்லோரது நன்மையையும் கருதி அவர்கள் வீடுகளிலேயே தத்தம் நோன்புக் கடமைகளையும் பெருநாள் கொண்டாட்டங்களையும் சுருக்கிக்கொண்டுள்ளனர். இஸ்லாம் வரட்டுப் பிடிவாதங்கள் அற்ற நெகிழ்ச்சியான சமயம் என்பதை எல்லாரும் உணர்ந்துகொள்கிறோம்.

  அடுத்த ரமலான் கொண்டாட்டத்தைக் வழக்கம் போல எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்!

  எல்லாருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

  - அ. மார்க்ஸ்
  (’நான் புரிந்துகொண்ட நபிகள்’ நூலாசிரியர்)

  Also see:
  Published by:Rizwan
  First published:

  Tags: Ramadan, Ramzan wishes

  அடுத்த செய்தி