ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதனையொட்டி இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பிறை தமிழ்நாட்டில் தென்படாத நிலையில், இன்று முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி, சலாவுதீன் முகமது அயூப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிறை தெரிந்தது முதல் 30 நாட்களுக்கு நோன்பு நோற்று அதன் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 30 நாட்களும் அதிகாலை 4.15 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பிருந்து மாலையில், தொழுகையை முடித்து கொண்டு உணவை எடுத்துக் கொடுத்துக் கொள்வர்கள்.
முஸ்லிம்கள் ரமலான் நோன்பிருப்பது ஏன்?
இஸ்லாமிய நாள்காட்டியின்படி 9வது மாதமான ரமலானில் இஸ்லாமியர்கள் அனைவரும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறையும் வரை நோன்பிருப்பார்கள். இது இஸ்லாமின் 5 கடமைகளுள் ஒன்று. இறைத்தூதர் முஹம்மது மூலம் மனிதர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் இறைவன் அருளியது திருக்குர்ஆன் என முஸ்லிம்கள் நம்புகின்றனர். ஒரு நூலாக இல்லாமல் 23 ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் ஆகும். அதன் முதல் வசனம் அருளப்பட்ட மாதமே ரமலான். இதன் காரணமாகவே இம்மாதம் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. கட்டாயம் அனைவரும் இதைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கோருகிறது.
இந்த ரமலான் மாதத்தில் உணவைத் தவிர்த்திருப்பது நோன்பின் அடிப்படை என்றாலும் அதுதவிர தவறான நடத்தைகள், பொய், பொறாமை உட்பட அனைத்து தீய குணங்களையும் விட்டு விலகியிருக்க வேண்டும். இல்லையென்றால், நோன்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், இறைவனுக்காக இரவுத் தொழுகையில் ஈடுபடுவது, குர்ஆன் ஓதுவது முதலானவற்றின் வழியாக ஆன்ம பலம் பெற வேண்டும். ஆண்டுதோறும் தனது சொத்தில் 2.5% தொகையைக் கணக்கிட்டு இம்மாதத்தில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இஸ்லாமின் இன்னொரு கட்டாயக் கடமையான இதை ’ஸகாத்’ எனச் சொல்வார்கள்.
இப்படியாக இந்த மாதம் முழுக்க உடல், மனம், ஆன்மா என அனைத்துக்கும் பயிற்சியளித்து இனிவரும் காலங்களில் அறம் சார்ந்து வாழும் மனிதனாக, இறைவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்பவனாக வேண்டும் என்பதே நோன்பில் நோக்கமாகும்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.