மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனாரை வழிபடும் அற்புதநாள். பிரதோஷம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள். இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் தென்னாடுடைய சிவனாரை வழிபடுங்கள். சிக்கல்களும் இன்னல்களும் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் வரும் சஷ்டி போல, ஏகாதசி போல, சிவராத்திரி விரதமும் வரும். சிவனாரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது நல்லது. சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து முழு ஈடுபாட்டுடன் சிவ பெருமானை நினைத்து வழிபடும் ஒரு இரவாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாத சிவராத்திரியின் முழு பலனை அடைவது எப்படி என்பதை இப்பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
சிவராத்திரியில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று குறிப்பிடப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தானம் செய்வது நல்லது
மாத சிவராத்திரிகளில் விரதம் இருந்து உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இவ்வாறு முறையாக வழிபடுவதன் மூலம் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு மோட்சம் அடையலாம். சிவனை நினைத்து நெஞ்சுருகி விழித்திருப்பதன் மூலம் மகாசிவராத்திரியின் முழு பலனையும் அடையலாம் என்கிறது சாஸ்திரம். விரதம் இருப்பதை விட தானம் செய்வது உயர்ந்தது. எனவே, இந்தநாளில், ஒரு நாலுபேருக்கேனும் உணவு அளியுங்கள்.
மேலும் படிக்க... பிரதோஷத்தின் வகைகளும்... அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்...
சிவராத்திரி வழிபாட்டின் மகிமைகள்
1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.
2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.
3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.
4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.
5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.
7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.
8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.