தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்று முடிந்தது. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் திருமுறை, திருப்புகழ் பாட ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட நன்னீர் ஊற்றப்பட்டு, ஹெலிகாப்டர் மூலமாக கலசங்கள், கோபுரங்களுக்கு மலர் தூவியும் விழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். ஜன.18ம் தேதி துவங்கிய இவ்விழாவுக்கான பூஜைகளின், தொடர்ச்சியாக ஜன.23 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இவ்விழாவை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக பழனியில் குவிந்தனர். குடமுழுக்கு விழாவை காண முன்பதிவு செய்த 6000 நபர்களுக்கு மட்டுமே மலைக்கோயிலில் அனுமதி வழங்கப்பட்டது. பிற பக்தர்கள் விழாவை காண மலை அடிவாரம் முதல் பேருந்து நிலையம் வரை 16 இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்றைய தினம் படிப்பாதை, கிரிவல வீதியில் உள்ள கடம்பன், இடும்பன், மயில்கள், அகஸ்தியர் உள்ளிட்ட கோயில்களுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.
விழா முடிந்த பின்னர் 11 மணிக்கு மேல் வழக்கம் போல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இன்று மாலை மலைக்கோயில் வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகருக்கு திருக்கல்யாணமும், தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசாமி எழுந்தருளும் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. கிரிவல வீதியில் சுவாமி வீதியுலாவும் இன்றிரவு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மலைக்கோயில், அடிவார பகுதிகள் முழுவதும் வாழை மரங்கள், பூக்கள் தோரணம், வண்ண விளக்குகள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளன.
கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டும் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Murugan, Murugan temple, Palani, Palani Murugan Temple