• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

ஊட்டத்தூர் சிவன் கோயில்

ஊட்டத்தூர் சிவன் கோயில்

மகத்துவங்கள் மிகுந்த ஊட்டத்தூர் ஆடல்வல்லானை வேண்டினால் அனைத்தும் நிறைவேறும். திருமண தடை நீங்கும். பஞ்ச நதன நடராஜர் சிறுநீரக சம்பந்தமான நோய் நீக்க வல்லவர். இழந்த பதவிகளை மீட்டு தரும் சக்தி படைத்தவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  • Share this:
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஊட்டத்தூரில் பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. ராஜராஜ சோழன் வழிபட்டு நோய்நீங்கப் பெற்றதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் பலப்பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

இந்தத் திருத்தலத்தில் அருளும் இறைவனுக்கு சுத்தரத்தினேஸ்வரர் என்று திருப்பெயர். அம்பாளின் திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி. இந்தக் கோயிலின் சிறப்பம்சம், வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் நடராஜன். ஆசியாவிலேயே எங்கும் கிடைக்காத அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனவர் இந்த நடராஜப் பெருமான். இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் தரிசனம் தருகிறார். இவரைத் தரிசித்து, உரிய பூஜைகள் செய்து வழிபட்டால், சிறு நீரகக் கோளாறுகள் நீங்கும் என்று நம்பிக்கையுடன் பக்தர்கள் சொல்கின்றனர்.

இதுகுறித்து, சிறுநீரகக் கோளாறுகள் நீங்குவதற்காக இங்கே செய்யப்படும் பரிகார பூஜை பற்றி ஆலய அர்ச்சகர் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் கேட்டதற்கு, “ பஞ்சநதனக் கல்லால் ஆன இங்குள்ள நடராஜர் பல்வேறு வகையான நோய்களையும் போக்கக்கூடியவர். குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் அறவே போக்கி அருள்புரிபவர்” என்று கோவில் அருகிலேயே வசிக்கும் மாணிக்கம் என்பவர் கூறுகிறார்.

சிறுநீரக பிரச்சினை தீர்க்கும் நடராஜர்க்கு அர்ச்சனை செய்யும் முறை பற்றி அர்ச்சகர் கூறுகையில்,  ”ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக வெட்டி அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அந்த 48 துண்டுகளை நாளுக்கு ஒன்றாக ஒரு டம்ளர் நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரக பிரச்சினை தீரும்” என்கிறார்.

பஞ்சநதனக் கல்லால் ஆன நடராஜர்


மேலும்,” இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம்” என்பதை இத்தலத்தில் உள்ள  கல்வெட்டுகள் தெரிவிக்கிறது என்றார்.

சிறுநீரகக் கோளாறுகள் மட்டுமின்றி, நமது சகல பிரச்னைகளுக்கும் தீர்வெனும் மருந்து தரும் மருத்துவகுணம் நிறைந்ததாக  இத்தலம் விளங்கிகிறது. ஒருமுறை, நாமும் இந்தத் தலத்துக்குச் சென்று,  சுத்த ரத்தினேஸ்வரரையும், நடராஜப் பெருமானையும் தரிசித்து வரலாம்.

மகத்துவங்கள் மிகுந்த ஊட்டத்தூர் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கினால் திருமண தடை நீங்கும். சிறுநீரக சம்பந்தமான நோய் குணமாகும். அத்துடன்  இழந்த பதவிகளை மீட்டு தரும் சக்தி படைத்தவர் இந்த நடராஜ பெருமாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க... சிவன் - என்றுமே நிரந்தர Fashion!உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: