புத்தாண்டு தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில் வரும் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது! இதற்கு முக்கிய காரணமாக ஆண்டின் தொடக்கத்திலேயே சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. அதற்கு அடுத்த இரண்டு மாதங்களிலேயே குருப்பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து ஆண்டின் மத்தியில் ராகு மற்றும் கேது பெயர்ச்சியும் நடைபெற இருக்கிறது. ஒரு ராசியில் ஓராண்டுக்கு மேல் சஞ்சரிக்கும் இந்த நான்கு கிரகங்களும் இந்த ஆண்டு பெயர்ச்சியாக இருக்கிறது. எனவே இது எல்லா ராசியினருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
மாதக் கோள்கள் என்று கூறப்படும் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகியவை தவிர்த்து மீதமுள்ள நான்கு கோள்களுமே இந்த ஆண்டில் ஒரு ராசியில் இருந்து வேறு ராசியில் மாறுகிறது. இவை பெயர்ச்சி ஆகும் ராசிகளும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்த புத்தாண்டு அன்று எந்த ராசியில் எந்த கிரகங்கள் இருக்கின்றன மற்றும் முக்கிய பெயர்ச்சிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஜனவரி 1, 2023 கிரக அமைப்புகள்:
புத்தாண்டு தோன்றும் ராசி: மேஷம்
சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரம்: ஜனவரி 1 ஆம் தேதி மதியம் 12:30 வரை அஸ்வினி, அதற்குப் பிறகு பரணி
கேதுவின் ஆதிக்கத்தில் நாளின் முதல் பகுதியும், சுக்ரனின் ஆதிக்கத்தில் இரண்டாம் பகுதியும் சந்திரன் சஞ்சரிக்கிறது.
* மேஷ ராசியில் சந்திரன் ராகுவுடன் இணைந்துள்ளது
* ரிஷப ராசியில் செவ்வாய் வக்ரமாக அமர்ந்துள்ளது
* கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது
* துலாம் ராசியில் கேது அமர்ந்துள்ளது
* தனுசு ராசியில் சூரியன் மற்றும் வக்கிரம் பெற்ற புதனுடன் அமர்ந்துள்ளன
* மகர ராசியில், ஆட்சி பெற்ற சனியும், உடன் சுக்ரனும் அமர்ந்துள்ளன
* மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு அமர்ந்தள்ளது
2023 ஆம் ஆண்டின் முக்கிய பெயர்ச்சிகள்
ஜனவரி 13: ரிஷப ராசியில் ஜனவரி 12 வரை வக்கிரமாக சஞ்சரிக்கும் ஆகும் செவ்வாய், ஜனவரி 13 முதல் வக்கிர நிவர்த்தி பெற்று சஞ்சரிக்கிறது.
ஜனவரி 17 சனி பெயர்ச்சி: கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்த சனி, தனது மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 12 ராசிக்கட்டத்தில், கும்பம் என்பது 11வது வீடாகும். இது லாபஸ்தானத்தைக் குறிக்கும் வீடாகும். மேலும், இது காற்று ராசி. மகரத்தில் ஆட்சி பெற்ற சனியின் தன்மை, கும்பத்தில் பெயர்ச்சியாகும் சனியின் தன்மையும் வேறுபடும். இந்த சனிப்பெயர்ச்சியில், தனுசு ராசியினருக்கு ஏழரை சனி முடிவடைகிறது, மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. அதே போல, கடக ராசிக்கு அஷ்டம சனி தொடங்குகிறது.
ஏப்ரல் 22 குரு பெயர்ச்சி: ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி மேஷ ராசியில் குரு நடக்க இருக்கிறது. பொதுவாக குரு பயிற்சி என்பது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். அந்த அடிப்படையில் 1 ஆண்டு குருப்பெயர்ச்சி முடிவடைந்து மீனத்தில் இருந்து மேஷத்திற்கு குரு பெயர்ச்சியாகிறார்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை மீன ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரித்து வந்த குரு, 1 முழு சுற்று முடிந்து, அதாவது 12 ராசியில் சஞ்சரித்து மீண்டும் ராசிக் கட்டத்தின் முதல் ராசியான மேஷத்தில் பெயர்ச்சியாக இருக்கிறது.
இதுமட்டுமில்லாமல் மேஷத்தில் பெயர்ச்சி ஆகும் குரு சில மாதங்கள் ராகு உடன் சஞ்சரிக்க இருப்பது சண்டாள யோகம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறது. எந்த கிரகத்துடன் எந்த ராசியில் குரு இருந்தாலும் முழு சுபரான குரு தனது சுபத்துவமான பலன்களை வெளிப்படுத்துவார். ஆனால் ராகு உடன் இருக்கும் பொழுது குருவின் தன்மை கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தும். ராகு மற்றும் குரு சேர்ந்திருப்பது மிகப்பெரிய மாற்றங்களையும் திருப்பங்களையும் உண்டாக்கும்.
அக்டோபர் 30 ராகு கேது பெயர்ச்சி: ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வரை மேஷ ராசியில் ராகுவும், துலாம் ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அக்டோபர் முப்பதாம் தேதியில் இருந்து ராகுவும் கேதுவும் மீனம் மற்றும் கன்னி ராசிக்கு முறையே பெயர்ச்சி ஆகிறார்கள். மற்ற கிரகங்களைப் போல அடுத்தடுத்து முன்னோக்கிச் செல்லாமல் பின்னோக்கி சுற்றும் கிரகங்கள் ராகு கேது. அதன் அடிப்படையில் மேஷத்தில் இருந்து ராகு மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார், அதேபோல துலாத்திலிருந்து கேது கன்னிக்கு பெயர்ச்சியாகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, New Year, Tamil News