ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

அருள்தரும் நவராத்திரி நாள் 9: நவராத்திரியின் கடைசிநாள் வழிபாடு எப்படி இருக்க வேண்டும்?

அருள்தரும் நவராத்திரி நாள் 9: நவராத்திரியின் கடைசிநாள் வழிபாடு எப்படி இருக்க வேண்டும்?

நவராத்திரி 2022

நவராத்திரி 2022

ஒன்பது நாட்களில், இறுதி நாள், நவமி திதியன்று வரும். ஒன்பது நாட்களும் இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதே என்று நினைக்கும் அளவுக்கு நாட்கள் வேகமாகச் செல்கின்றன.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கடந்த சில நாட்களாக, நவராத்திரி முதல் நாள் தொடங்கி, ஒவ்வொரு நாளும் வணங்க வேண்டிய தேவியர், மந்திரம், அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் ஆகியவற்றைப் பார்த்து வருகிறோம்.

  தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெண்களால், பெண்களுக்காக, பெண் தெய்வங்களை கொண்டாடும் பண்டிகைதான் நவராத்திரி.

  ஒன்பது நாட்களில், இறுதி நாள் நவமி திதியன்று வரும். நவராத்தியின் ஒன்பது தினங்களில், முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவியும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியும் வழிபாடு செய்யும் வழக்கமும் இருக்கிறது. நவமி திதி, மகா நவமியாக, சரஸ்வதி தேவியின் அருள் பெற, சரஸ்வதி பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

  பிரதமை திதியில் தொடங்கும் நவராத்திரி, 9 நாட்கள் நீளும். 2022 ஆம் ஆண்டு, நவராத்திரி செப்டமபர் 26 ஆம் நாள் தொடங்கியுள்ளது. நவராத்திரியின் 9ஆம் நாள், அக்டோபர் 4 ஆம் தேதி அன்று வருகிறது.

  நவராத்திரி நாள் 9: அக்டோபர் 4, செவ்வாய்க்கிழமை

  வழிபட வேண்டிய சக்தி தேவி: சரஸ்வதி தேவி, பரமேஸ்வரி தாயார், சாமுண்டாதேவி

  திதி: நவமி

  நிறம்: இளஞ்சிவப்பு

  மலர்: வெள்ளை நிற மலர்கள், கதம்பம்

  கோலம்: தாமரை கோலம், வாசனை பூக்கள், பொருட்கள் பயன்படுத்தி கோலம்

  ராகம்: வசந்தா ராகம்

  நைவேத்தியம்: காலை நேரத்தில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மாலை நேரத்தில் கருப்பு கொண்டை கடலை சுண்டல்

  மந்திரம்: சரஸ்வதி நாமாவளி, சரஸ்வதி தேவி பாடல்கள், சௌந்தரிய லஹரி, லட்சுமி அஷ்டோத்திரம், லக்ஷ்மி சஹஸ்ரநாமம்

  பலன்கள்: கலைகளில் தேர்ச்சி, கல்வியில் மேம்பாடு, குடும்பத்தில் சுபிட்சம், சந்ததி வளரும், நோய் வாய்ப்படாமல் பாதுகாப்பு

  சப்தமி திதியில், சாம்பவி தேவியை சரஸ்வதி தேவியாக வணங்கினாலும், நவமி, நவராத்திரி ஒன்பதாம் நாள் அன்று வழிபடுவது மிகவும் சிறப்பு.

  கலைகள், கல்வியில் சிறந்து விளங்க, படிப்பில் உள்ள தடைகள் விலக, முன்னேற்றம் பெற, நவராத்திரி ஒன்பதாம் நாளன்று, கலைக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்கி வழிபடலாம்.

  ருத்ரனின் அம்சமாகக் கருதப்படும் சாமுண்டா தேவி, சப்த கன்னியர்களில் ஒருவர். இவரை வணங்குபவர்களுக்கு தீய சக்தி, கண் திருஷ்டி, ஏவல் சூனியம் உள்ளிட்ட பலவித காரணங்களால் ஏற்படும் இனம் புரியாத பயம் நீங்கும்.

  பூஜை செய்யும் முறை:

  இதுவரை நீங்கள் நவராத்திரிக்கு யாரையும் வீட்டுக்கு அழைத்து உபசரித்து தாம்பூலம் கொடுக்கவில்லை என்றால், இன்று செய்யலாம்.

  3, 6, 9 என்ற எண்ணிக்கையில், பெண்களை, சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து விருந்து பரிமாறலாம்.

  ஒரே ஒரு பெண் குழந்தைக்காவது வீட்டுக்கு அழைத்து, நலங்கு வைத்து, நைவேத்தியம் செய்ய பிரசாதத்தை கொடுக்க வேண்டும். உங்களால் இயன்ற அளவுக்கு வளையல், மருதாணி, பூ, பழம், தேங்காய், வெற்றிலை என்று தாம்பூலம் கொடுக்கலாம்.

  அதே போல, பெண்களுக்கு ரவிக்கை துணி, கண்ணாடி வளையல் வைத்து தாம்பூலம் கொடுக்கலாம். குறைந்தது 3 பெண்களுக்காகவாவது இன்று தவறாமல் தாம்பூலம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

  நவராத்திரி 2022 இன் கடைசி நாள் செவ்வாய்க்கிழமை அன்று வருவது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் விரதம் இருந்து பூஜை செய்தால் கைமேல் பலன்கள் கிடைக்கும். இது நாள் வரை விரதம் இருக்க முடியாதவர்கள், ஒன்பதாம் நாள் அன்று விரதம் இருக்கலாம்.

  கொலு வைக்கப்பட்ட இடத்தில், தாமரை வடிவத்தில் கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும். கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

  கல்விக்கு அதிபதி சரஸ்வதி என்பதால், அன்றைய தினத்தில் உங்களால் இயன்ற அளவுக்கு சிறுமிகளுக்கு, சிறுவர்களுக்கு படிப்பு சம்மந்தமான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். வெற்றிலை பாக்கு, தாம்பூலத்தோடு மாதுளைப்பழம் வைத்துக் கொடுப்பது சிறப்பு.

  செவ்வாய்கிழமை என்பதால் நவராத்திரி பூஜை செய்த பின்பு, துர்க்கை அம்மன் கோயிலுக்கு விளக்கேற்றி வழிபடலாம்.

  பூஜைக்கான நேரம்:

  காலை 9 மணிக்குள்

  மாலை 6 மணிக்கு மேல்

  Read More : அருள் தரும் நவராத்திரி நாள் 7 | பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்.!

  நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம்

  கொலு வைக்காதவர்கள், வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் உள்ள படங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை சூட்டி வழக்கம்போல பூஜை மற்றும் நைவேத்தியம் செய்யலாம்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Festival, Navaratri