ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

அருள் தரும் நவராத்திரி நாள் 1: பூஜை முதல் பலன்கள் வரை முழுமையான தகவல்கள் இதோ...!

அருள் தரும் நவராத்திரி நாள் 1: பூஜை முதல் பலன்கள் வரை முழுமையான தகவல்கள் இதோ...!

நவராத்திரி 2022

நவராத்திரி 2022

Navratri 2022 : நவராத்திரி முதல் நாள், செப்டம்பர் 26 அன்று என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்னும் சில நாட்கள்தான், ஏற்கனவே நவராத்திரி கொண்டாட பல வீடுகளிலும் தயாராகி வருகின்றனர். கொலுவைக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு கேட்கவே வேண்டாம். பழைய பொம்மைகளுக்கு கொலுவுக்கு தயார் செய்து, புதிய பொம்மைகள் வாங்கி, வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து, நவராத்திரிக்கு தேவையான பொருட்கள் வாங்க ஷாப்பிங் என்று பட்டியல் நீளும். இது எல்லாமே, 9 நாட்களும் அம்பாளை கொண்டாடத்தான் என்பதற்குத் தானே.

  நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள் செய்து கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு அர்ச்சிக்க, பூஜை செய்து சாற்ற என தினமும் ஒரு வகை மலர், தினசரி வாசிக்க ஒரு விதவிதமான ராகம் மற்றும் வாத்தியங்கள், பூஜையில் பாராயணம் செய்ய மந்திரங்கள் என்று அன்றாடம் ஒரு திருவிழாவே வீட்டில் நடக்கும் அளவுக்கு நவராத்திரி அவ்வளவு சிறப்பான பண்டிகை. நவராத்திரி முதல் நாள், செப்டம்பர் 26 அன்று என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

  நவராத்திரி நாள் 1: செப்டம்பர் 26, திங்கட்கிழமை

  வழிபட வேண்டிய சக்தி தேவி: மகேஸ்வரி

  திதி: பிரதமை

  நிறம்: வெண்மை

  மலர்: மல்லிகைப் பூ

  கோலம்: அரிசி மாவினால் போட்டுக் கோலம் இட வேண்டும்

  ராகம்: தோடி

  நைவேத்தியம்: காலை நேரத்தில் வெண் பொங்கல் மற்றும் மாலை நேரத்தில் வெள்ளை கொண்டைகடலை சுண்டல்

  மந்திரம்:

  ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே

  சூல ஹஸ்தாயை தீமஹி

  தன்னோ மஹேஸ்வரி

  ப்ரசோதயாத்

  பலன்கள்: செல்வ விருத்தி, ஆயுள் விருத்தி, கடன் மற்றும் வறுமை நீங்கும்

  நவராத்திரியின் முதல் நாளன்று, அரிசி மாவை மட்டும் பயன்படுத்தி, போட்டுக் கோலம் போடா வேண்டும். மகேஸ்வரி என்ற சக்தியின் வடிவத்தில் இன்று தேவியை வணங்கி வழிபட வேண்டும். மது கைடவர் என்ற அசுரனை வதம் செய்த நாள் இன்று. இந்த சக்தி சொரூபத்தை 2 வயது குழந்தையாக பாவித்து, குமாரி வடிவத்தில் வணங்கலாம். மல்லிகைப் பூக்கள் இன்று மிகவும் உகந்தவை என்றாலும், சிவப்பு நிற அரளிப்பூக்கள், வில்வ பூக்களாலும் அர்ச்சனை செய்வது சிறப்பான பலன்களைத் தரும். தோடி ராகத்தில் பாடினால் அல்லது இசைத்தாலும் வாழ்வில் சுபிட்ஷம் உண்டாகும், வாழ்நாள் நீடிக்கும், வறுமை அகலும்.

  சக்திதேவியை குழந்தை வடிவில் உபாசிப்பதால், இன்று சிறுமிகளை அழைத்து, அம்பாளுக்கு படைத்த நைவேத்தியத்தை வழங்கலாம்.

  பூஜை செய்யும் முறை:

  பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். அல்லது, அபிராமி அந்தாதி ஒலிக்கச் செய்து பூஜை செய்யலாம். அம்பாளின் திருவுருவப் படத்துக்கு மல்லிகை மாலை சூட்டி அலங்கரிக்கலாம். கொலு வைக்கப்பட்ட இடத்தில், அரிசி மாவில் கோலம் போட்டு, முதல் படிக்கு கீழே விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.

  கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

  நைவேத்தியமாக படைக்கப்பட்ட உணவை, வீட்டில் இருக்கும் சிறுமிகளுக்கு முதலில் சாப்பிடக் கொடுக்கலாம்.

  மாலை நேரத்தில், அதே போல சுண்டல் நைவேத்தியம் செய்து, வீட்டுக்கு வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் வழங்கலாம்.

  பூஜைக்கான நேரம்:

  காலை 6.15 - 7.15 மணி, 9.15 - 10.15 மணி.

  மாலை 4.45 - 5.45 மணி, 7.30 - 8.30 மணி.

  நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம்

  கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.

  அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் அகல் தீபத்தைக் குறிக்கிறது. ஆனால், இது மிகவும் அகலமாக, பெரிய அளவில் இருக்கும் மண் விளக்கு ஆகும். அகண்ட தீபம் என்று நீங்கள் அணையா விளக்கு. நவராத்திரி தொடக்க நாள் அன்று, அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி, அம்பாளையும், உங்கள் குல தெய்வத்தையும் பிரார்த்தித்துக் கொண்டு, விளக்கேற்றி, நவராத்திரி முடியும் வரை தொடரலாம். காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும். கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Navrathri