ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

அருள் தரும் நவராத்திரி நாள் 2 : பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்!

அருள் தரும் நவராத்திரி நாள் 2 : பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்!

நவராத்திரி நாள் 2

நவராத்திரி நாள் 2

Navratri 2022 : சக்தி தேவியின் மகிமையை கொண்டாட, அம்பாளின் அனுகிரகம் பெற, நவராத்திரி புரட்டாசி அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சக்தி தேவியின் மகிமையை கொண்டாட, அம்பாளின் அனுகிரகம் பெற, நவராத்திரி புரட்டாசி அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், விருந்தினர்கள், நண்பர்களை அழைத்து உபசரிப்பது, தாம்பூலம் கொடுப்பது, என்று விமரிசையாகக் கொண்டாடப்படும்.

    ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு அர்ச்சிக்க, பூஜை செய்து சாற்ற என்று தினமும் ஒரு வகை மலர், தினசரி வாசிக்க ஒரு விதவிதமான ராகம் மற்றும் வாத்தியங்கள், பூஜையில் பாராயணம் செய்ய மந்திரங்கள் என்று அன்றாடம் ஒரு திருவிழாவே வீட்டில் நடக்கும். செப்டம்பர் 26 அன்று நவராத்திரி தொடங்கி, நவராத்திரியின் 2 ஆம் நாள், செப்டம்பர் 27 ஆம் தேதி வருகிறது.

    நவராத்திரி நாள் 2: செப்டம்பர் 27, செவ்வாய்க்கிழமை

    வழிபட வேண்டிய சக்தி தேவி: ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, கௌமாரி அம்மன் மற்றும் பிரம்மச்சாரிணி

    திதி: துவதியை

    நிறம்: சிவப்பு

    மலர்: முல்லைப் பூ

    கோலம்: கோதுமை மாவினால் கட்டம் போட்ட கோலம் இட வேண்டும்

    ராகம்: கல்யாணி ராகம்

    நைவேத்தியம்: காலை நேரத்தில் புளி சாதம் மற்றும் மாலை நேரத்தில் வெள்ளை பயத்தம் பருப்பு சுண்டல்

    மந்திரம்: ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்

    பலன்கள்: ஐஸ்வர்யம் பெருகும்

    நவராத்திரியின் இரண்டாம் நாளில், துர்க்கையின் பல வடிவங்களை வழிபடலாம். பார்வதி தேவியின் மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்கள் தான் கொற்றவை தேவி. அதில் மிகவும் சக்தி வாய்ந்த அவதாரம் தான் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி. முல்லைப்பூவும் மறு என்ற இலையும், ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு மிகவும் விருப்பம் என்று நம்பப்படுகிறது.

    மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தாலான பொருட்களை தானம் செய்வது, சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கும்.

    செவ்வாய் கிரகத்தைக் கட்டுப்படுத்தும் கிரகம் தான் பிரமச்சாரிணி தேவி, இவரை பூஜிப்பவருக்கு செவ்வாய் கிரக தோஷம் மற்றும் தாக்கம் நீங்கும் என்பது ஐதீகம்.

    பூஜை செய்யும் முறை:

    பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இன்று ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தை ஒலிக்கச் செய்து பூஜை செய்யலாம். அம்பாளின் திருவுருவப் படத்துக்கு முல்லை மாலை சூட்டி அலங்கரிக்கலாம். கொலு வைக்கப்பட்ட இடத்தில், கோதுமை மாவில் கட்டம் கோலம் போட்டு, முதல் படிக்கு கீழே விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.

    கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

    நைவேத்தியமாக புளி சாதம் செய்து அம்மனுக்கு படைக்கலாம். அதை வீட்டில் பெண்களுக்கு முதலில் சாப்பிடக் கொடுத்து அனைவருக்கும் விநியோகிக்கலாம்.

    அருள் தரும் நவராத்திரி நாள் 1: பூஜை முதல் பலன்கள் வரை முழுமையான தகவல்கள் இதோ...!

    மாலை நேரத்தில், அதே போல சுண்டல் நைவேத்தியம் செய்து, வீட்டுக்கு வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் வழங்கலாம்.

    செவ்வாய்க் கிழமை அம்பாளுக்கு, துர்க்கைக்கு மிகவும் உகந்த நாள் என்பதால், இன்று விரதம் இருந்து வழிபடுவது மேன்மையைத் தரும். மாலை நேரத்தில், தவறாமல் அம்மன் கோயிலிக்கு சென்று வரவும்.

    பூஜைக்கான நேரம்:

    காலை 9 மணிக்குள்

    மாலை 6 மணிக்கு மேல்

    நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம்

    கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.

    அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் அகல் தீபத்தைக் குறிக்கிறது. ஆனால், இது மிகவும் அகலமாக, பெரிய அளவில் இருக்கும் மண் விளக்கு ஆகும். அகண்ட தீபம் என்று நீங்கள் அணையா விளக்கு. நவராத்திரி தொடக்க நாள் அன்று, அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி, அம்பாளையும், உங்கள் குல தெய்வத்தையும் பிரார்த்தித்துக் கொண்டு, விளக்கேற்றி, நவராத்திரி முடியும் வரை தொடரலாம். காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும். கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Navaratri