ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நவராத்திரி 2022: இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் நவராத்திரி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

நவராத்திரி 2022: இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் நவராத்திரி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

நவராத்ரி

நவராத்ரி

தமிழ்நாட்டில் கொண்டாடுவதைப் போலவே வடநாட்டில் நவராத்திரி அல்லது தசராவை கொண்டாடும்

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  இந்தியாவில் பல நாட்களுக்கு மிகவும் விமரிசையாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக கொண்டாட்டமாகவும், பூஜை, வழிபாடு என்று பக்தி மயத்தோடும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றுதான் நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் நவராத்திரி தொடங்கி நவமி திதி அன்று முடியும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் வழக்கத்திற்கு ஏற்ப கொண்டாடப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை கொலு வைத்து கொண்டாடுவது பிரசித்தி பெற்றது.

  கொலு வைக்காமல் இருந்தாலுமே, தினசரி அம்பாளுக்கு பூஜை நைவேத்தியம் செய்து பெண்களையும் சிறுமிகளையும் வீட்டிற்கு அழைத்து உபசரித்து தாம்பூலம் கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று வருவது வழக்கமாக உள்ளது. அது மட்டுமன்றி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஆலயங்களிலும் கொலு வைத்து தினசரி சிறப்பு பூஜைகளும் நடைபெறும். செப்டெம்பர் 26ம் தேதி நவராத்திரி வெவ்வேறு பகுதிகளில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

  வட இந்தியாவில் நவராத்திரி

  தமிழ்நாட்டை பொறுத்தவரை நவராத்திரி என்பது மகிஷாசுரனை வதம் செய்த சக்தி தேவியின் வெவ்வேறு சொரூபத்தை வெவ்வேறு வடிவில் ஒவ்வொரு நாளும் வணங்கி வழிபடுகிறோம்.

  ஆனால் வட இந்தியாவில் நவராத்திரி என்பது ராவணனை வதம் செய்து ஸ்ரீ ராமர் வென்ற கொண்டாட்டத்தை தான் குறிக்கிறது. வட இந்தியாவில் நவராத்திரி என்பது 10 நாட்கள் கொண்டாடப்படும் தசரா என்று கூறப்படுகிறது. ஒன்பது நாட்கள் நவராத்திரி போலவே கொண்டாடப்பட்டு, பத்தாவது நாளான விஜயதசமி அன்று ராவணன் மற்றும் கும்பகர்ணனின் உருவத்தை எரித்து கொண்டாடும் பழக்கம் வட இந்திய மாநிலங்களில் நிலவி வருகிறது.

  தமிழ்நாட்டில் கொண்டாடுவதைப் போலவே வடநாட்டில் நவராத்திரி அல்லது தசராவை கொண்டாடும் பெண்கள் விரதமிருந்து நவ துர்கையை தினசரி வழிபட்டு வருவார்கள். தினமும் ஒரு வகை இனிப்பு செய்து பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவார்கள். துர்காஷ்டமி வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

  துர்காஷ்டமி அன்று சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை கடவுளின் அவதாரமாகவே துதித்து அவர்களுக்கு ஆடைகள், மங்கல பொருட்கள் அனைத்தையும் கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவார்கள்.

  குல்லுவில் சர்வதேச தசரா பண்டிகை

  சுற்றுலாவாசிகள் மற்றும் தேனிலவு தம்பதிகள் விரும்பும் குலு மணாலியில் நவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள குலுவில் தசரா பண்டிகை கோலாகலமாக தொடங்கும். இது சர்வதேச தசரா பண்டிகையாகவும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. இந்த பண்டிகைக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டுமே 4 முதல் 5 லட்சம் நபர்கள் வருகை தந்து கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  கிழக்கிந்தியப் பகுதிகளில் நவராத்திரி

  கிழக்கு இந்திய பகுதிகள் என்று கூறும் பொழுது அதில் பெரும்பாலும் வட கிழக்கு இந்தியாவில் உள்ள பகுதிகள் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும்.

  இந்த இடங்களில் நவராத்திரி என்பது துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவது போலவே உலகத்தையே ஆட்டி படைத்த மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த துர்க்கையின் வெற்றியை கொண்டாடும் கொண்டாடி மகிழும் பண்டிகை தான் நவராத்திரி.

  பெண்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிற புடவைகளில் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டு பிரம்மாண்டமாக துர்கா பூஜாவை கொண்டாடுவார்கள்.

  மகாலய அமாவாசை நாளன்று தொடங்கும் இந்த கொண்டாட்டம் தசமி திதி அதாவது விஜயதசமி வரை நீளும். தினசரி துர்க்கை அம்மனுக்கு பூஜை, ஆடல், பாடல் என்று ஒவ்வொரு நாளுமே திருவிழா போல களை கட்டும்.

  மேற்கிந்தியாவில் நவராத்திரி திருவிழா

  மேற்கிந்தியா என்று கூறும்பொழுது குஜராத்தை தவிர்க்கவே முடியாது. குஜராத்தில் நவராத்திரி என்பது மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பெரும்பாலான பெண்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களும்மே விரதமிருந்து சக்திதேவியை வழிபடுகிறார்கள். வீடு முழுவதுமே சுத்தம் செய்து அலங்கரித்து பூஜை செய்கிறார்கள். தினசரி கோவிலுக்கு சென்று வழிபடும் பழக்கமும் இருக்கிறது.

  அது மட்டுமல்லாமல் இரவுகளில் கர்பா என்று பாரம்பரியமான நடனமாடும் நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதில் ஆண்களும் பெண்களும் நம்மூரில் இருக்கும் கோலாட்டம் போல தாண்டியா ஆட்டம் ஆடி கொண்டாடி மகிழ்வார்கள்.

  அதே போல ராஜஸ்தானிலும் நவராத்திரி விமரிசையாக கொண்டாடப்படும். ராஜஸ்தானில், பத்தாவது நாளன்று தசரா பண்டிகை மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது.

  Read More: அருள்தரும் நவராத்திரி நாள் 9: நவராத்திரியின் கடைசிநாள் வழிபாடு எப்படி இருக்க வேண்டும்?

  மாநிலம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் குவியும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறும். சம்பல் ஆற்றின் கரையில் 75 அடி உயர உயரத்தில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன உள்ளிட்ட அரக்கர்களின் உருவ சிலை வைக்கப்பட்டு, அவை எரிக்கப்படும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Festival, Navaratri