Home /News /spiritual /

நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா தொடங்கியது...

நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா தொடங்கியது...

வஞ்சுளவல்லி தாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்

வஞ்சுளவல்லி தாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்

NachiyarKovil Srinivasa Perumal Temple | 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கல்கருட தலமாக போற்றப்படும் நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் உள்ள வஞ்சுளவல்லி தாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடி பெருமாளை தரிசனம் செய்துள்ளார். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு கல்ளாலான கருடன் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. ஆண்டுக்கு இருமுறை பிரம்மோற்சவத்தில் கல் கருட சேவை வீதி உலா நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

    பல்வேறு சிறப்புடைய இவ்வாலயத்தில் பங்குனி தேர் திருவிழா 10 தினங்கள் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றம், பெருமாள் தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



    மேலும் படிக்க... திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் உருத்திரபாத திருநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

    இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவையானது வருகிற 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பங்குனி திருத்தேரோட்டம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. நிறைவாக 10ம் நாளான, 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றியுடன் இவ்வாண்டிற்கான பங்குனி பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple, Thanjavur

    அடுத்த செய்தி