Murugan worship : மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார். கடகத்தில் நீச்சம் பெறுவார். சிம்மம் மற்றும் மகர ராசிக்கு செவ்வாய் யோகத்தை செய்யக் கூடிய கிரகம் ஆவார். செவ்வாய்க்கு உரிய எண் 9. செவ்வாய்க்கு உரிய தெய்வம் சுப்பிரமணியர். அதனால் செவ்வாய் அன்று முருகனை வழிபடுதல் சிறப்பு...
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.
விரதம் இருகும் முறை
செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையிலேயே நீராடி, அருகில் இருக்கும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். பிறகு பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை தொடங்க வேண்டும். பின் வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து சஷ்டி கவசம், கந்தகுரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய தோத்திரங்கள் மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். அதன்பின் மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தல் நல்லது.
பலன்கள்
செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மை உண்டாகும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
செவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும். தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் நவகிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.