முருகன், தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் கொண்டாடி மகிழும் தெய்வம். அப்படிப்பட்ட முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகும். இவற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. தைப்பூச நாளில்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நீர் தோன்றியது என்று புராணங்கள் கூறுகின்றன. அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு தைப்பூசம் (பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி) தை மாதம் 22ம் தேதி வருகிறது.
திருமண வரம் கிடைக்கும் தைப்பூசம்
முருகப்பெருமான் வள்ளியை மணந்துகொண்ட நாள் தைப்பூசம் என்பது நம்பிக்கை. எனவே அந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பார்கள் பக்தர்கள்.
பழனி மலையில் முருகன் ஆண்டியாக அமர்ந்திருக்கும் போது சூரனை அழிக்க தேவியானவள் தன் சக்தி முழுவதையும் கொண்டு ஒரு வேலை உருவாக்கி வழங்கி அருளி நாள் தைப்பூசம். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார்.
தைப்பூசத்தின் சிறப்புகள்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய அந்த மாதவர் ஜோதி வடிவம் எடுத்து இறைவனோடு கலந்த தினம் தைப்பூசம். இந்த நாளில் வடலூரில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். வழக்கமாக ஆண்டின் பிற மாதங்களிலெல்லாம் ஆறு திரைகள் மட்டுமே விலக்கிக் காட்டப்படும் ஜோதிதரிசனம் தைப்பூச திருநாளில் மட்டுமே ஏழு திரைகளும் முழுமையாக நீக்கப்பட்டு முழுமையாக ஜோதி தரிசனம் காண வழி செய்யப்படும்.
மேலும் சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். தைப்பூச தினத்தன்று அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தைப்பூச விரத முறை
காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது. இதில் காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது நல்லது. முடிந்தால் காலை மாலை என இருவேளையும் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.