ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருமண யோகங்கள்: யாருக்கெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் நடக்கும்?

திருமண யோகங்கள்: யாருக்கெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் நடக்கும்?

திருமணம்

திருமணம்

Marriage | பிறப்பு ஜாதகத்தில், திருமண வீட்டை எந்த விதமான பாப கிரகங்களும் பார்க்காமல், சம்மந்தப்படாமல் இருந்தால் இளம் வயதில் திருமணம் நடக்கும்.

ஒரு நபருக்கு ஜாதக ரீதியாக எப்பொழுது திருமணம் நடக்கும் என்பதை கோச்சாரப்படி கிரகங்களின் பெயர்ச்சி, ஜனனகால ஜாதகத்தின்படி களத்திர ஸ்தானம் அதாவது ஏழாவது இடம் எப்படி இருக்கிறது மற்றும் சாதகமான தசாபுக்தி நடக்கிறதா என்ற மூன்று விஷயங்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். திருமணம் தாமதம் ஆவதற்கு ஜாதகத்தில் இருக்கும் ஒரு சில தோஷங்களும் காரணமாக இருக்கலாம். உதாரணமாக ஏழாம் வீட்டில் செவ்வாய் அல்லது சனி அல்லது பாபக் கிரகங்கள் இருக்கும் பொழுது திருமணம் தாமதமாகும். அதே போல இளம் வயதிலேயே சிலருக்கு திருமணம் நடந்துவிடும். ஜாதக ரீதியாக இவ்வாறு இளம் வயதிலேயே திருமணம் யாருக்கு எல்லாம் நடக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

பொதுவாக எப்போது இளம் வயதில் திருமணம் நடக்கும்:

  • ஏழாம் வீட்டு அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்திருந்தாலும் இளம் வயதில் திருமணம் நடக்கும்.
  • ஜாதக ரீதியாக, இரண்டு அல்லது ஏழாம் வீட்டு அதிபதியின் தசா புத்தி நடக்கும் போது, 20களின் தொடக்கத்திலேயே திருமணம் நடக்கும்.
  • பிறப்பு ஜாதகத்தில், திருமண வீட்டை எந்த விதமான பாப கிரகங்களும் பார்க்காமல், சம்மந்தப்படாமல் இருந்தால் இளம் வயதில் திருமணம் நடக்கும்.
  • சூரியன், கேது, சனி, செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களும் ஏழாம் வீட்டோடு எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இருந்தால் 20களில் தொடக்கத்தில் திருமணம் நடக்கும்.
  • ஜாதகப்படி, 5 ஆம் வீடு, 7 ஆம் வீடு மற்றும் 9 ஆம் வீடு ஆகிய மூன்று வீடுகளும் (அல்லது இதில் உள்ள கிரகங்களும்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருந்தால், இளம் வயதில் திருமணம் நடக்கும்.
  • திருமணம் நடப்பதற்கு ஜாதகரின் களத்திரஸ்தானம் என்று கூறப்படும் ஏழாமிடத்திற்கு எந்தவித தோஷமும் அல்லது பாவிகளின் பார்வையும் இல்லாமல் இருக்க வேண்டும்.

Also see... ஏழரைச் சனி என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு வரும்?

இளம் வயது திருமணத்தை குறிக்கும் கிரகங்கள்:

இளம் வயதில் திருமணம் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கும் இரண்டு முதன்மை கிரகங்கள் சுக்கிரன் மற்றும் புதன் ஆகும். அடுத்ததாக குரு மற்றும் சந்திரன்.

22 அல்லது 23 வயதுக்குள் திருமணம் நடக்கக் காரணமாக இருக்கும் சுக்கிரன் மற்றும் புதன்

அசுர குருவான சுக்கிரன் வாழ்வின் அனைத்து சுக போகங்களுக்கும் காரகனாக திகழ்கிறார். அது மட்டுமின்றி ஒரு நபரின் திருமணத்திற்கும் சுக முக்கியமான கிரகம் சுக்கிரன் தான்.

ஜாதகத்தில் சுக்கிரன் ஏழாமிடத்தில் அமர்ந்திருந்தாலோ அல்லது ஏழாம் இடத்துடன் தொடர்பு கொண்டிருந்தாலோ ஜாதகருக்கு இளம்வயதிலேயே திருமணம் நடந்துவிடும். உதாரணமாக நீங்கள், மேஷம் லக்னமாக இருந்தால் உங்களது ஏழாம் வீடு துலாம் ராசியாக வரும். துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிடும். அதுமட்டுமின்றி எந்த லக்னத்தில் சுக்கிரன் இருந்தாலும் நேரடியாக ஏழாம் வீட்டை பார்க்கிறார். எனவே லக்னத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.

Also see... திருமணமும் ஜோதிடமும்... விவாஹத்திற்கு ஏன் 10 பொருத்தங்கள் முக்கியம்?

அடுத்ததாக புதன் கிரகம்! ஒன்பது கிரகங்களிலேயே மிகவும் இளைய கிரகம் புதன். அறிவு, கணக்கு, நிர்வாகம் என்று பல விஷயங்களுக்கு காரணமாக இருக்கும் புதன் இளம்வயதில் திருமணம் நடப்பதற்கும் காரணமாக இருக்கிறது. மேலே கூறியுள்ளதுபோல, ஏழாம் வீட்டில் புதன் தொடர்பு கொண்டிருந்தாலும் அல்லது ஏழாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் ஜாதகருக்கு இளம் வயதில் திருமணம் நடைபெறும். அதுமட்டுமின்றி ஜாதகரின் கணவன் அல்லது மனைவி இளமையான தோற்றம் கொண்ட நபராகவும் இருப்பார்.

24 முதல் 27 வயதுக்குள் திருமணம் நடக்க காரணமாக இருக்கும் குரு மற்றும் சந்திரன்

மற்ற கிரகங்களைப் போல அல்லாமல் குருவுக்கு நான்கு விதமான பார்வைகள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும், அமர்ந்திருக்கும் ராசியிலிருந்து 2, 5, 7, மற்றும் 9 ஆம் வீடுகள் என்று நான்கு வீடுகளை குரு பார்க்கிறார். எனவே குரு எங்க அமர்ந்திருந்தாலும் உங்கள் ஜாதகப்படி ஏழாவது வீட்டை குரு பார்க்கும் போது 23 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதுக்குள் திருமணம் நடைபெற்று விடும்.

Also see... குரு பலன் வந்தால் திருமணம் நடந்துவிடுமா?

அது மட்டுமின்றி குரு லக்னத்தில் இருந்தால் நேரடியாக ஏழாம் வீட்டை பார்ப்பார் அப்பொழுதும் விரைவில் திருமணம் நடக்கும் அல்லது ஏழாம் வீட்டு அதிபதியாக குரு ஆட்சியோ உச்சமோ பெற்று அமர்ந்திருந்தால் அப்பொழுதும் திருமணம் விரைவில் நடைபெறும். அடுத்ததாக சந்திரன். மற்ற கிரகங்களைப் போலவே, சந்திரன் ஏழாம் வீட்டில் இருந்தாலோ அல்லது ஏழாம் வீட்டை பார்த்தாலும் இளம் வயதில் திருமணம் நடைபெறும்.

மேற்குரிய கிரகங்களும் ஜாதகத்தில் சுப பார்வை பெற வேண்டும். பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாவ கிரகங்களின் பார்வை ஏழாம் வீட்டை பாதித்திருந்தாலோ மேற்கூறியது போல இளம் வயது திருமணம் நடக்காது. உதாரணமாக லக்னத்தில் சுக்கிரன் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருக்கும் போது சனியால் திருமணம் தாமதமாகும்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Marriage