ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதில் இன்று திருப்பாவை 29வது பாடலையும் திருப்பள்ளியெழுச்சியில் 09வது பாடலையும் பாடுவது சிறந்தது.
திருப்பாவை பாடல்-29
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
விளக்கம்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை; பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு என்று பாடுகின்றனர் ஆயர் குல பெண்கள் கூறுவதைப்போல பாடுகிறாள் ஆண்டாள்.
திருப்பள்ளியெழுச்சி பாடல்-09
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே ! வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே ! கடலமுதே ! கரும்பே ! விரும்படியார் எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் ! எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !
விளக்கம்: விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே ! உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே ! வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே ! கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aandal, Margazhi, Thiruppavai