மார்கழி மாதம் என்பது சைவ மற்றும் வைணவ மக்களுக்குரிய ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும். இந்த மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அதிலும் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிப்பட்டால் பலவிதமான நன்மைகள் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.
பிரதோஷம் என்றால் என்ன?
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் இதற்கு பயன்படுத்தினர். அப்படி திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, அதற்குள் இருந்து பல தெய்வீக அம்சம் நிறைந்த பொருட்களும், தேவதைகளும், தெய்வங்களும் வெளிப்பட்டன. இறுதியாகத்தான் அமிர்தம் வெளிப்பட்டது.
முதன் முதலில் கடலில் இருந்து வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அதோடு கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகியும் வலி பொறுக்க முடியாமல், விஷத்தை கக்கியது. அந்த இரண்டு விஷமும் ஒன்று சேர்ந்து 'ஆலகால' விஷமாக மாறியது. அது இந்த உலகையே அழிக்கும் சக்தி படைத்ததாக இருந்தது இந்த விஷம்.
இதையடுத்து அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த விஷம் அவரது உடலுக்குள் நுழையாமல் இருக்க வேண்டும் என்று பார்வதி அன்னை அவரது கழுத்தை பிடித்தார். அதனால் விஷம் சிவனுடைய கழுத்திலேயே நின்று, கழுத்து நீலநிறமாக மாறியது.
இதனால்தான் ஈசனை 'நீலகண்டன்' என்றும் அழைக்கிறோம். கழுத்தில் விஷம் பரவியதால் மயக்கமடைந்த சிவன், மயக்கம் தெளிந்ததும் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று ஆனந்த நடனம் புரிந்தார். அந்த நாளே 'பிரதோஷ தின'மாக வழிபடப்படுகிறது. இதனால்தான் பிரதோஷ தினத்தில் சிவன்- பார்வதி மற்றும் நந்தியம்பெருமான் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.
Also see... கூட்ட நெரிசல் தாங்கல.. சபரிமலையில் இன்று முதல் தனிவரிசை... புது விதி அமல்!
சிவனை வணங்கும் முறை
இப்படி சிறப்பு மிக்க இந்த பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானையும் சேர்த்து வணங்கிவர வேண்டும். பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்க வேண்டும்.
மார்கழி மாதத்தில் புதன் கிழமையில் வரும் பிரதோஷத்தின் போது சிவ பார்வதியை வணங்குவதால் உங்களுக்கு வறுமை நிலை நீங்கும். செல்வம் சேரும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். அத்துடன் பிறருடனான பகை நீங்கும் என்பது நம்பிக்கை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.