மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் நடைபெறும் தேர்த் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டுக்கான சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த, 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பகலில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள், இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான, இறைவனே செட்டிப்பெண்ணாக வந்து பிரசவம் பார்த்த வைபவம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தேறின.
தொடர்ந்து, மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்திகள் மலையிலிருந்து புறப்பட்டு, கீழே ஆண்டார் வீதியில் உள்ள தேர் மண்டபத்தில் எழுந்தருளினார். உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளியபின், 6 மணிக்கு மேஷ லக்னத்தில், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், "ஓம் நமச்சிவாய.. சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி" என்ற கோஷங்கள் முழங்க, திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக, கைலாய வாத்தியங்கள் முழங்க, நூற்றுக்கணக்கான சிவனடியார்கள், ஆடியபடியும், பாடியபடியும் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இக்கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் என தனித் தனியாக தேர்கள் உள்ளன. இவை இரண்டும் ஒரே நாளில் அடுத்தடுத்து வடம் பிடிக்கப்பட்டு, கிரிவலப்பாதையில் வலம் வருகின்றன.
இந்த தேரோட்டம், நகரின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் நடப்பதால், தேரோட்ட நேரத்தின்போது அப்பகுதியில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேரோடும் வீதிகள் முழுவதும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
Also see... திருச்சி மலைக்கோட்டையின் சிறப்புகள்...
திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.