ஜனவரி 14 மகரவிளக்கு அன்று மாலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் இன்று (ஜனவரி 12) பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருசுவாமி குளத்தினால் கங்காதரன் பிள்ளையின் தலைமையில் பந்தளம் ஸ்ராம்பிகல் அரண்மனையில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணங்கள் தங்கள் தலையில் ஏந்தி சபரிமலைக்கு பாதயாத்திரையாக எடுத்துச் செல்கிறார்கள்.
பந்தளம் வலியதம்புரான் பந்தளம் அரண்மனையின் பிரதிநிதியாக இம்முறை ராஜராஜ வர்மா ஊர்வலத்தை முன்னின்று நடத்துகிறார். இன்று ஜனவரி 12ம் தேதி அதிகாலை வலியகோயிக்கல் தர்மசாஸ்தா கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். காலை 11 மணி வரை பக்தர்கள் ஆபரணங்களை தரிசனம் செய்யலாம். மதியம் கோவிலில் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறும். ஒரு மணிக்கு குளத்தினால் கங்காதரன் பிள்ளை தலைமையிலான குழுவினர் திருவாபரண பெட்டிகள் தலையில் ஏந்தி சபரிமலை நோக்கிச் செல்வர்.
முதல் நாள் பாரம்பரிய பாதை வழியாக குளநாடா, உள்ளன்னூர், ஆரன்முளா வழியாக அயிரூர் புதிகாவ் கோயிலை வந்தடையும். இரண்டாம் நாள் பெருநாடு ஊர்வலம் லாஹா வனத்துறை விடுதியை அடைந்து அங்கு முகாமிடும். மூன்றாம் நாள் கானன பாதை வழியாக ஊர்வலம் செல்கிறது. பிளாப்பள்ளியில் இருந்து அட்டதோடு வழியாக வலியானவட்டம், செறியானவட்டம் வழியாக மாலையில் சபரிமலை சென்றடையும்.
தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடைபெறும் போது பொன்னம்பலமேட்டில் மகரஜோதி ஒளிரும். ஊர்வலத்துடன் பயணிக்கும் மன்னர் பம்பை வலம் வந்து பக்தர்களுக்கு பஸ்ம விபூதி வழங்கி அருள்வார். மூன்றாம் நாள் சபரிமலையில் களப பூஜை, மற்றும் மாளிகை புறத்தில் குருதியும் முடிந்து சபரிமலை நடை சாத்தி திரு ஆபரணங்களுடன் பந்தளம் அரண்மனைக்கு திருப்பி செல்வார்கள்.
அதேபோல் மகர ஜோதி தரிசிக்க தற்போதே பல்லாயிர கணக்கான பக்தர்கள் மலை உச்சியில் குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் பர்ணசாலா ( தற்காலிக குடில் ) அமைத்து தங்கி வருகின்றனர். மேலும் மகர ஜோதி (14-01-2023) அன்று பகல் 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மகர ஜோதி தரிசனம் முடிந்து 15ஆம் தேதி காலை முதல் மறுபடியும் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayyappan temple in Sabarimala, Magaravilakku, Sabarimalai