சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்திபெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் மகரசங்கராந்தியையொட்டி சிறப்புமிக்க மகர ஜோதி தரிசனம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த மாதம் 30-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், மகரவிளக்கு பூஜையையொட்டி, பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலிலிருந்து சிறப்பு பூஜைகளுக்காக திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.
சபரிமலை சன்னிதானத்திற்கு திருவாபரணங்கள் மாலையில் வந்தடைந்தன. பின்னர் அய்யப்ப விக்ரகத்தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, பொன்னம்பல மேட்டில் 3 முறை ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஜோதி வடிவத்தில் ஒளிர்ந்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக, 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஐயப்பனுக்கு வரும் 18ஆம் தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிந்து 20ஆம்தேதி காலை 6.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.