முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மகா சிவராத்திரி நாளில் வரும் இன்னொரு விசேஷம்.. விரதம் இருந்தால் இருமடங்கு நன்மை..!

மகா சிவராத்திரி நாளில் வரும் இன்னொரு விசேஷம்.. விரதம் இருந்தால் இருமடங்கு நன்மை..!

மகா சிவராத்திரி 2023

மகா சிவராத்திரி 2023

maha shivaratri 2023 | எந்த ஆண்டும் இல்லாத ஒரு விசேஷமாக, மகா சிவராத்திரியன்று சனி பிரதோஷமும் நடைபெறுகிறது. எனவே இந்த ஆண்டு மகா சிவராத்திரி மிக மிக சக்தி வாய்ந்தது மற்றும் சிறப்பானது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சக்திக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி என்பது போல சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்பது பழமையான  ஐதீகம். மாதம் ஒரு முறை சிவராத்திரி கொண்டாடப்பட்டாலும் மாசி மாதம் வரும் மகா சிவாராத்திரிக்கு தனி சிறப்பு உண்டு.

இந்த நாளுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான சிவராத்திரி வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத ஒரு விசேஷமாக, மகா சிவராத்திரியன்றே சனி பிரதோஷமும் நடைபெறுகிறது. எனவே இந்த ஆண்டு மகா சிவராத்திரி மிக மிக சக்தி வாய்ந்தது மற்றும் சிறப்பானதாக கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு வரக்கூடிய மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷத்தின் மகிமைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தமிழ் மாதங்களின் அடிப்படையில் மாசி மாதத்தின் அமாவாசைக்கு முந்தைய திதியான சதுர்த்தசி திதியில் அனுஷ்டிக்கப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அதாவது மாசி மாதம் ஆறாம் தேதி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. அதே சனிக்கிழமைதான் சனி பிரதோஷ விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

பிப்ரவரி 18ஆம் தேதி பகலில் திரயோதசி திதியும், இரவில் சதுர்த்தசி திதியும் சேர்ந்து ஒரே நாளில் வருவதால் இந்த சிவராத்திரி விசேஷமான சிவராத்திரியாக அமைந்துள்ளது. இந்த நாளில் பக்தர்கள் விரதமிருக்க இரு மடங்கு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகா சிவராத்திரியன்று விரதம் இருந்தால் மூன்று பிறவியில் செய்த பாவங்கள் முழுவதுமாக நீங்கும் என்பது ஐதீகம். மனக் கவலைகள், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள், வறுமை நிலை ஆகியவை நீங்கி வாழ்வில் எல்லா நிலைகளையும் மேன்மை பெறுவதற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்தால் போதும்.

ஆனால், எல்லாராலும் மகா சிவராத்திரியன்று முழுமையாக விரதம் இருக்க முடியாது. சிவபெருமானின் ஆசி இருந்தால் மட்டுமே மகா சிவராத்திரியன்று விரதம் இருக்க முடியும் என கூறுவார்கள்.

மகா சிவராத்திரி அன்று பல யுகங்களில் நடந்த அற்புதங்கள்:

பண்டைய கால புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் மகா சிவராத்திரி பற்றி பல கதைகள் இருக்கின்றன.

  • பார்வதி தேவி நீண்ட காலம் கடும் தவமிருந்து, ஈசனை அடைந்த தினம் தான் மகா சிவராத்திரி.
  • உலகம் முழுவதும் கடலில் மூழ்கி உலகில் உயிரினங்களே இல்லாது போகும் ஒரு நிலை ஏற்பட்ட நேரத்தில் பார்வதி தேவி உலகத்தில் இருக்கும் உயிர்களை காக்க வேண்டுமென்று தீவிரமாக தவம் இருந்து சிவபெருமானை பூஜித்தார். அவர் பூஜை செய்த அந்த இரவுதான் மகா சிவராத்திரி நாள் என்பது ஐதீகம்.
  • அதேபோல பார்வதிதேவி சிவபெருமானின் இடது பக்கத்தில் தனக்கு பாகம் பெற்ற நாளும் மகா சிவராத்திரி தான் என்று கூறப்படுகிறது.
  • மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தீவிரமான தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து ‘பாசுபதம்’ என்ற அஸ்திரத்தை வரமாகப் பெற்ற நாள் சிவராத்திரியாகும்.
  • அதே போல மார்க்கண்டேயன் என்றென்றும் இளமையாக இறப்பே இல்லாமல் இருப்பதற்கு எமனை சம்ஹாரம் செய்த நாளும் சிவராத்திரி தான்.

  • கண்ணப்ப நாயனார் கதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் குருதி வழிய தன்னுடைய கண்களை எடுத்து ஈசனுக்கு பொருத்திய அந்த நாளும் சிவராத்திரி தான்.
  • அதுமட்டுமில்லாமல் மும்மூர்த்திகளில் விஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு யார் பெரியவர் என்று சண்டை ஏற்பட்ட போது லிங்க வடிவமாக சிவபெருமான் இவர்களுக்கும் மகா விஸ்வரூபமாக காட்சியளித்ததும் மகா சிவராத்திரி அன்றுதான்.
  • மேலும், பிரம்மா மற்றும் விஷ்ணுவை விட, சிவபெருமான் சக்தி வாய்ந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஜோதிர் லிங்கமாக சிவபெருமான் உருவெடுத்ததும் சிவராத்திரி நாளில் தான் என்று கூறப்படுகிறது.

சனிப் பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி இரண்டும் அரிதாக ஒன்றிணையும் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் நாட்பட்ட நோய்களும் தீரும், தோஷங்கள் நிவர்த்தியாகும், கடன் தொல்லை நீங்கும், வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடைய முடியும் என கூறப்படுகிறது.

First published:

Tags: Guru pooja, Maha Shivaratri, Religion