மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும்.
மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.
இந்த பூஜைகள் நான்கு காலங்களாக பிரித்திருப்பார்கள்.
முதல் காலம் - மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
இரண்டாம் காலம் - இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
மூன்றாம் காலம் - நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 03 மணி வரை
நான்காம் காலம் - அதிகாலை 03 மணி முதல் காலை 06 மணி வரை
முதல் காலத்தில் பிரம்மன் சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும். பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதனால் ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான கர்மாக்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும். கடன் தொல்லை நீங்கும்.
இரண்டாம் காலத்தில் பெருமாள் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். இரண்டாம் காலத்தில் வெல்லம், பால், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வ அர்ச்சனை மற்றும் பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும். யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் கால பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. சகல பாவங்களும் நீங்கும்.
மூன்றாம் காலத்தில் பூஜையை கருணையே உருவான சக்தியே செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை ‘லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வ அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ‘இருநிலனாய் தீயாகி..' எனும் பதிகத்தையும் பாராயணம் செய்யலாம். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.
நான்காம் காலத்தில் பூஜை செய்யும் போது அரச பதவிகள் தேடி வரும். முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். கரும்புச்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், செய்ய வேண்டும். பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும்.
மகா சிவராத்திரியின் போது சிவ புராணம் படிப்பதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் தேவார திருவாசகப் பாடல்கள் பாடுவதும் எண்ணற்ற சத்விஷயங்களைக் கொடுக்கும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மகா சிவராத்திரி இந்த வருடம் சனிக்கிழமை பிப்ரவரி 18ஆம் தேதியான நாளை வருவது இன்னும் சிறப்பு. தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்வோம். அபிஷேகப் பொருட்களும் வில்வமும் செவ்வரளி முதலான மலர்களும் சமர்ப்பித்து வேண்டுவோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maha Shivaratri, Sivan