ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வு - மதுரை குலுங்க இன்று வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வு - மதுரை குலுங்க இன்று வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

கள்ளழகர்

கள்ளழகர்

Madurai Chithirai Thiruvizha Kallalagar vaigai Aaru | சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று அதிகாலை 5:50 மணி முதல் 6:20 மணி வரை கோலாகலமாக நடைபெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக வண்டியூர் அருகில் உள்ள தேனூர் மண்டபத்திற்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெற்றுக்கொள்வதற்காக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கும் வருவது தான் அழகரின் 5 நாள் மதுரை பயண நோக்கம்.

  அழகர் கோவில் வழக்கப்படி வெள்ளியங்குன்றம் ஜமீன் அழகரை வழியனுப்பி வைக்க, நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து புறப்பட்டார். பின், அழகர் கோவில் நிலைக் கதவில் குடியிருக்கும், அவரது தளபதி பதினெட்டாம் படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று மதுரை நோக்கி புறப்பட்டார்.

  ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற ஒரு வகையான கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், 'காங்கு' எனப்படும் கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளழகர் கோலத்தில் மக்கள் வெள்ளத்தில் மதுரைக்கு பயணப்படுகிறார்.

  அழகர் ஊர்வலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட உண்டியல் வண்டிகள், அவருடைய உடை, ஆபரணங்கள், அலங்கரிக்கப்பட்ட பேருந்து ரதம் மற்றும் அழகர், கருப்பசாமி வேடமிட்ட பக்தர்களுடன் லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்றுள்ளனர்.

  அழகர் கோவிலிலிருந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, காதக்கிணறு கடச்சனேந்தல் உள்ளிட்ட ஊர்களில் அமைக்கப்பட்ட திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளிய கள்ளழகர் நேற்று (ஏப்ரல் 15) காலை மதுரை மாநகரின் நுழைவுவாயிலான மூன்று மாவடி வந்தடைந்தார்.

  அங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்று எதிர்சேவையை துவக்கினர்.

  தொடர்ந்து, மதுரையில் புதூர், ரிசர்வ் லைன், அவுட் போஸ்ட் ஆகிய வழிகளில் உள்ள மண்டக படிகளில் எழுந்தருளி

  இரவு 9 மணி அளவில் தல்லாகுளம் பெருமாள் கோவில் சென்றடைந்தார்.

  அங்கு கள்ளழகருக்கு அழகர் கோயிலில் இருந்து தலைச்சுமையாக கொண்டு வரப்பட்ட நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் நிகழ்வு நடத்தப்பட்டு, ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இன்று காலை இறங்கினர்.

  வைகை ஆற்றில் தொட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதில் அழகரை இறக்கி வைத்து பூஜைகள் செய்யப்படும்.

  ஆற்றில் நீரின் போக்கு அதிகரித்து காணப்படுவதால் ஆற்றுக்குள் மக்கள் இறங்குவது தடை செய்யப்பட்டு உள்ளது.

  ஆற்றில் இறங்கிய பின்னர் வீர ராகவ பெருமாளுக்கு மாலை சாற்றும் நிகழ்வு நடைபெறும். அதனை தொடர்ந்து மதியம் இராமராயர் மண்டகபடியில் தீர்த்த வாரி நிகழ்வு நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான அழகரின் பக்தர்கள் இணைந்து ஆட்டுத்தோலில் செய்யப்பட்ட பையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை கொண்டாடி மகிழ்வர்.

  மேலூம் படிக்க... மதுரை தேரோட்டம்: பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வரும் மீனாட்சி-சொக்கரின் புகைப்படங்கள்...

  பின்னர், ஏப்ரல் 17 அன்று தேனூர் மண்டக படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்றிரவு இராமராயர் மண்டக படியில் தசாவதார நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகள் முடித்து ஏப்ரல் 19 அன்று பூப்பல்லக்கில் மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு திரும்புவார்.

  திரும்பும் வழியிலும் நூற்றுக்கணக்கான மண்டக படிகளில் எழுந்தருளுவார். மொத்தத்தில் அழகர் மலையில் இருந்து கிளம்பி மீண்டும் மலைக்கு திரும்பும் வரை 450 க்கும் மேற்பட்ட மண்டக படிகளில் எழுந்தருளுகிறார்.

  வைகை ஆற்றில் மக்கள் இறங்குவது தடை செய்யப்பட்டு உள்ளதால், அவர்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏதுவாக தடுப்புகள் அமைத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

  ' isDesktop="true" id="731793" youtubeid="LK-j3MtMrd0" category="spiritual">

  சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ட்ரோன் கேமரா, கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட வகைகளில் குற்ற சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மதுரை வடகரை பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

  அழகரின் இருப்பிடத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக Track அழகர் என்ற வசதியும் மதுரை காவலன் மொபைல் செயலியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Madurai Chithirai Festival