Home /News /spiritual /

மதுரையில் இன்று சித்திரைப் பெருவிழா தேரோட்டம்...

மதுரையில் இன்று சித்திரைப் பெருவிழா தேரோட்டம்...

சித்திரை தேரோட்டம்

சித்திரை தேரோட்டம்

madurai chithirai festival therottam சித்திரை பெருவிழாவின் முற்பகுதியில் நடைபெறும் மீனாட்சி கோவில் விழாக்களின் உச்ச விழாவும், இறுதி விழாவுமான தேரோட்டம் இன்று காலை 6:30 மணிக்கு தொடங்கியது.

பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 20 நாட்கள் நடைபெறும் 'திருவிழாக்களின் திருவிழா' - சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 5 முதல் 16 வரை மீனாட்சி அம்மன் கோவில் விழாக்களும், ஏப்ரல் 12 முதல் 21 வரை கள்ளழகர் கோவில் விழாக்களும் நடைபெறும். இதில், மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர்.

மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக நம்பிக்கை உண்டு.
அதனடிப்படையில், மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டும் பட்டாபிஷேக விழா ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு கோலாகலமாக நடைபெற்றது.

பின்னர் ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று திக் விஜயமும், நேற்று மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்று காலை 5 மணி முதல் 5:30 மணிக்குள் மேஷ லக்னத்தில் அம்மனும் சுவாமியும் தேருக்கு எழுந்தருளுவா். பூஜைகள் முடித்து 6:30 மணி அளவில் தேர் புறப்படும். பெரிய தேரில் சுந்தரேஸ்வரர் - பிரியாவிடையும், பின்னால் சிறிய தேரில் மீனாட்சியும் வலம் வருவர்.

கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று பெரும் உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுப்பர். கீழ மாசி வீதியில் துவங்கி தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கீழ மாசி வீதிக்கு தேர் மதியம் வந்து சேரும்.



மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் கோவிலுக்கு செய்து கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்களில் தேரோட்டம் நடைபறுகிறது. குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க ட்ரோன் கேமரா, சிசிடிவி கேமரா, கண்காணிப்பு டவர், குற்றவாளிகளை அடையாளம் காணும் செயலிகள், தனிப்படை போலீசார் என மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் படிக்க... மதுரையின் அரசியும் அவளது நாயகனும் வீதியுலா!



பக்தர்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் : 83000 17920 தொடர்பு கொள்ளலாம். 'Maamadurai' மொபைல் செயலி மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம், வாகன நிறுத்துமிடம், கோவிலை சுற்றி உள்ள கழிப்பறை, குடிநீர் வசதிகள் ஆகியவற்றை Live tracking மூலமும் கண்டறியலாம்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival

அடுத்த செய்தி