மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்...
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்...
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
Madurai Meenatchi Thirukalyanam | சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேசுவரருக்குமான திருக்கல்யாணம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 20 நாட்கள் நடைபெறும் 'திருவிழாக்களின் திருவிழா' - சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 5 முதல் 16 வரை மீனாட்சி அம்மன் கோவில் விழாக்களும், ஏப்ரல் 12 முதல் 21 வரை கள்ளழகர் கோவில் விழாக்களும் நடைபெறும். இதில், மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர்.
சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு இன்று (ஏப்ரல் 14) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில் மீனாட்சியும் - சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு சித்திரை விதிகளில் வலம் வந்து, முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி பின் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
பின்னர் காலை 6 மணி அளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர். அதனை தொடர்ந்து, காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர், இரவு 7 மணி அளவில் ஏ.சொக்கலிங்கம் பிள்ளை டிரஸ்டிலிருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் உலா வருவர்.
சித்திரை திருவிழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 15 அன்றும், உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16 காலை நடைபெறவுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.