மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக வண்டியூர் அருகில் உள்ள தேனூர் மண்டபத்திற்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெற்றுக்கொள்வதற்காக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கும் வருவது தான் அழகரின் 5 நாள் மதுரை பயண நோக்கம்.
அதன்படி, கள்ளழகர் கோலத்தில் மக்கள் வெள்ளத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு அழகர் கோவிலில் இருந்து கிளம்பி 20 கிலோ மீட்டர் பயணித்து ஏப்ரல் 15 ஆம் தேதி காலை மதுரை மூன்று மாவடி பகுதிக்கு வந்தடைந்தார். அங்கு, நடைபெற்ற எதிர்சேவை நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து, அன்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை பெற்றுக் கொண்டார்.
பின்னர், ஏப்ரல் 16 ஆம் தேதி அதிகாலையில் லட்சக்கணக்கான மக்கள் சூழ தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து, அன்று மதியம் ராமராயர் மண்டகபடியில் ஆயிரக்கணக்கான மக்கள் அவர் மீதி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி நிகழ்த்தி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பின்னர், ஏப்ரல் 17 ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற பின், அன்றிரவு ராமராயர் மண்டகபடியில் தசாவதார காட்சி அளித்தார்.
பின்னர், இன்று (ஏப்ரல் 19) அதிகாலை தல்லாகுளத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய பின்னர் மதுரையில் இருந்து புறப்பட்டார். தொடர்ந்து, மாலையில் மூன்றுமாவடி அருகே மதுரையிடமிருந்து விடைபெற்று மீண்டும் கள்ளழகர் கோலத்தில், அழகர்கோவில் நோக்கில் சென்ற அழகரை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வழியனுப்பி வைத்தனர்.
அழகர் கோவில் முதல் மதுரை வரையிலான பயணத்தின் போது வழியெங்கும் 450 க்கும் மேற்பட்ட மண்டக படிகளில் எழுந்தருளிய அழகர், மீண்டும் கோவில் நோக்கி செல்லும் வழியிலும் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி நாளை மறுநாள் (ஏப்ரல் 21) பிற்பகலில் அழகர்கோவிலை சென்றடைவார்.
மேலும் படிக்க... "போறார் அழகர்" - மதுரையில் இருந்து புறப்பட்டார் கள்ளழகர்!
மீனாட்சி கோவில் விழாக்கள் 10 நாள், அழகர் கோவில் விழாக்கள் 10 நாள் என மொத்தம் 20 நாட்கள் நடைபெற்ற சித்திரைப் பெருவிழா கொண்டாட்டங்களில், அழகரின் 5 நாள் விழாக்களில் தான் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மதுரை குலுங்க பெருங்கொண்டாட்டத்தில் திளைத்து மகிழ்ந்தனர்.
மீனாட்சி திருவிழாவில் நகர மக்கள் பெரும்பகுதியினரும், அழகர் விழாவில் நாட்டுப்புற மக்கள் பெருமளவிலும் பங்கேற்றனர். முன்னது நகரமக்களின் விழா; பின்னது நாட்டுப்புற மக்களின் விழா.
அழகர் விழாவில் பங்குபெறும் மக்களிடம் பக்தி உணர்வுடன் சுற்றுலா உணர்வும் நிறைந்து காணப்பட்டது. எளிமையினையும், ஏழ்மையினையும் வெளிக்காட்டும் வாழ்க்கை கொண்ட இவ்வகையான மக்களே, எங்கும் நிறைந்து சித்திரைத் திருவிழாவுக்கு உயிர்ப்பூட்டினார்கள்.

கள்ளழகர்
மேலும் படிக்க... மதுரையே அதிர வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மக்களை தேடி வந்து, எந்தவித பேதமில்லாமல் மக்கள் அனைவரையும் சேர்த்து, அவர்களுடன் இருந்து, அவர்களின் கொண்டாட்டங்களில் பூரித்த கள்ளழகர், மக்களிடமிருந்து பிரியாவிடை பெறுகையில் உணர்ச்சிப் பெருக்கோடு அவரை வழியனுப்பி வைத்த மக்கள், அடுத்தாண்டு சித்திரைப் பெருவிழாவை மனதுக்குள் எண்ணிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.