Home /News /spiritual /

கள்ளழகரை மகிழ்விக்கும் தீர்த்தவாரி - ஆட்டுதோல் பையின் உணர்வும், தொடர்பும்!

கள்ளழகரை மகிழ்விக்கும் தீர்த்தவாரி - ஆட்டுதோல் பையின் உணர்வும், தொடர்பும்!

கள்ளழகர்

கள்ளழகர்

சித்திரைப் பெருவிழாவின் நாயகர் கள்ளழகரை தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்விக்க பயன்படுத்தும் ஆட்டுத்தோல் பை விற்பனை தேரடி வீதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா ஏப்ரல் 16 ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. அதன் பின்னர், பிற்பகலில் ராமராயர் மண்டகபடியில் தீர்த்தவாரி எனும் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்வித்து கொண்டாடும் விழா நடைபெறும். இந்த விழா குறித்து, "அழகர் வருவதற்கு முன்னரே அவரது தங்கையின் திருமணம் முடிந்து விட்டதால், கோபித்துக் கொண்டு ஆற்றில் இறங்கி விட்டு செல்லும் அவரை குளிர்விக்கவே தீர்த்தவாரி எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் விழா கொண்டாடப்படுவதாக" ஒரு பழமரபு கதையை மக்கள் சொல்கின்றனர்.

மேலும், சித்திரை மாதத்தில் விழா நடைபெறுவதால் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் நோக்கிலும் இப்படி ஒரு நடைமுறையை கடைப்பிடிப்பதாகவும் மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வுகளில், ஏராளமான பக்தர்கள் அழகரின் வேடம் அணிவது, திரியெடுத்து ஆடுவது, தண்ணீர் பீய்ச்சுவது உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.

இதில் தண்ணீர் பீய்ச்ச ஆட்டுத் தோலால் செய்யப்பட்ட பையை பயன்படுத்துகின்றனர். கீழமாசி வீதியில் தேர் முட்டி அருகே இந்த பையின் விற்பனை மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டுத்தோல் பைகள் தயாரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

சித்திரை திருவிழா தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக ஆட்டுத் தோலை சேகரித்து பதப்படுத்தும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் நன்கு காயவைத்து பின்னர் பை போன்ற தன்மைக்கு ஏற்றவாறு பாலிஷ் செய்து அதன் அகலத்தை விரிவு படுத்தி தண்ணீர் கசியாத வகையில் கச்சிதமாக தைக்கின்றனர்.
தோல் பைகள் அதன் அளவு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப தேரடி வீதியில் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய ஆட்டு தோல் பை 300 ரூபாய்க்கும், பெரிய ஆட்டுத்தோல் பை 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாததால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும், இந்தாண்டு மீண்டும் மக்கள் பங்களிப்புடன் திருவிழா நடைபெறுவதால் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் படிக்க... தமிழ்ப் புத்தாண்டு அன்று கனி காணுதல் என்னென்ன நன்மைகள் தரும்...

மேலும், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவிலான பக்தர்கள் தோல் பை வாங்கிச் செல்வதாகவும் இதனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு விற்பனை அதிகரித்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

அழகர் வேடமிட்டு தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக கொடியேறியதில் இருந்தே விரதம் இருந்து, புத்துணர்வுடன் அழகரை வரவேற்று அவரை குளிர்வித்து மகிழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.மேலும், இரண்டாண்டுகளாக அழகரை பார்க்க முடியாமலும், கொண்டாட்டத்தில் திளைக்க முடியாமலும் தவித்த பக்தர்கள் இந்தாண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் தோல் பையை வாங்கிக் கொண்டு செல்வதாக கூறுகின்றனர்.

மேலும் படிக்க... தமிழ்ப் புத்தாண்டு அன்று கனி காணுதல் என்னென்ன நன்மைகள் தரும்...

சித்திரைப் பெருவிழாவை வெறும் சைவ - வைணவ சமய நிகழ்வு என்பதற்கு அப்பால், அந்த விழாவில் பெரும் பொருளாதார சுழற்சியும், எந்தவித வேறுபாடும் இல்லாத சமூக தொடர்பும் நிகழ்கின்றன.வரலாற்றில் முதன்முறையாக இரண்டாண்டுகள் திருவிழாவில் மக்கள் பங்கேற்பு தடைபட்டு, இந்தாண்டு மீண்டும் மக்கள் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. எனவே, இதுவரை இல்லாத கொண்டாட்டத்தையும், பொருளாதார ஊக்கத்தையும், சமூக புத்துணர்வையும் இந்த திருவிழாவில் அனுபவிக்க முடியும் என்பதற்கான கொம்பொலி எட்டுத்திக்கும் எதிரொலிப்பதை உணர முடிகிறது!
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival

அடுத்த செய்தி