Home /News /spiritual /

சித்திரைப் பெருவிழா நான்காம் நாள் வீதி உலா... தங்கப்பல்லக்கில் மீனாட்சியும் சொக்கரும்...

சித்திரைப் பெருவிழா நான்காம் நாள் வீதி உலா... தங்கப்பல்லக்கில் மீனாட்சியும் சொக்கரும்...

மீனாட்சி அம்மன் 4வது நாள் - சித்திரை திருவிழா

மீனாட்சி அம்மன் 4வது நாள் - சித்திரை திருவிழா

madurai chithirai festival | மதுரை சித்திரைப் பெருவிழாவின் நான்காம் நாள் வீதி உலா நிகழ்வில் தங்கப்பல்லக்கில் பாவக்காய் மண்டகப்படியில் வீதி உலா வந்த மீனாட்சி - சுந்தரேசுவரரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.

பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 16 நாட்கள் நடைபெறும் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதன் தொடர்ச்சியாக அன்று மாலை கற்பக விருட்சம் வாகனத்தில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரரும், சிம்மம் வாகனத்தில் மீனாட்சியும் நான்கு மாசி வீதிகளிலும் வீதி உலா வந்தனர்.

இரண்டாம் நாள் காலை தங்க சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் வீதியுலா சென்ற நிலையில், மாலையில் பூதம் - அன்னம் வாகனத்தில் நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்தனர்.
மூன்றாம் நாள் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்திலும் சுவாமியும் அம்மனும் நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்தனர்.

நான்காம் நாள் திருவிழாவையொட்டி நேற்று காலை மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி சின்னக்கடை வீதி, தெற்கு வாசல் வழியாக வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவக்காய் மண்டகப்படியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலை பாவக்காய் மண்டகப்படியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மீனாட்சியும், சொக்கநாதரும் தங்கப்பல்லக்கில் மிதந்து வந்து கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தனர்.



நான்கு வீதிகளின் இரு புறமும் திரளான மக்கள் குவிந்திருந்த மக்கள் சுவாமி ஊர்வலத்தின் முன்பாக மீனாட்சி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் சென்ற குழந்தைகளையும் ரசித்தும், நாட்டுப்புறக் கலை ஆட்டங்களில் பங்கேற்றும், மேள தாள கொண்டாடத்தின் உற்சாகத்துடன் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்கேற்க இயலாமல், இந்த ஆண்டு மீண்டும் பங்கேற்றுள்ள மக்கள் திரளால் எப்போதும் இல்லாத அளவிலான சமூக புத்துணர்வையும், பொருளாதார சுழற்சியையும் சித்திரை திருவிழா காட்சிகள் பிரதிபலித்து வருகின்றன.

மேலும் படிக்க... சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்தகால் நடப்பட்டது...



இதே போன்று தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்வுகளும், அதனை தொடர்ந்து ஏப்ரல் 12 ஆம் தேதி பட்டாபிஷேகமும், 13 ஆம் தேதி திக் விஜயமும், 14 ஆம் தேதி திருக்கல்யாணமும், 15 ஆம் தேதி தேரோட்டமும், 16 ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival

அடுத்த செய்தி